சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலக வளாகத்தில் சிறப்பு இரத்ததான முகாம்

இடுகை இடப்பட்ட நாள்: 12 JUN 2025 7:44PM by PIB Chennai

உலக குருதிக் கொடையாளர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையுடன் இணைந்து இன்று  திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலக வளாகத்தில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமை மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர்  திருமதி தி நிர்மலா தேவி துவங்கி வைத்தார்.  ஐம்பதிற்கும் மேற்பட்ட அஞ்சல் பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர். ரத்த வங்கி  மருத்துவர் அரவிந்த் தலைமையிலான குழுவினர் ரத்த தானங்களைப் பெற்றுக்கொண்டனர். ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்தும்  ரத்த தானம் குறித்து நிலவி வரும் தவறான கருத்துக்கள் பற்றியும் மருத்துவர் அரவிந்த் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் குருதிதானம் வழங்குவதன் மூலம் உடலில் ஏற்படும் இரும்பு சத்து சமநிலை பற்றியும் அதனால் இதய நோய்கள், கேன்சர் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை தவிக்கலாம் என்பதையும் பெண்கள், நீரிழிவு மற்றும் இரத்த கொதிப்பு உள்ளோர் குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த தனம் வழங்கலாம் என்பதையும்   மருத்துவர் அரவிந்த் எடுத்துரைத்தார். இந்தத் தகவல்கள் தன்னார்வலர்களுக்கும் பங்கேற்றோர்க்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தன.

இந்த சிறப்பு ரத்த தான முகாமில் மண்டல அலுவலகம், திருச்சி அஞ்சல் கோட்டம், ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டம் மற்றும் ரயில்வே அஞ்சல் கோட்டம் ஆகிய அலுவலகங்களில் பணியாற்றும் உதவி இயக்குனர்கள். முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர்கள், உதவி அஞ்சல் கண்காணிப்பாளர்கள், அஞ்சல் அலுவலர்கள், எழுத்தர்கள், தபால்காரர்கள், பன்முகத்திறன் பணியார்கள் உள்ளிட்டோர் பங்குபெற்றனர். குருதி தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சிராப்பள்ளி முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் திரு பிரகாஷ் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலக உதவி இயக்குனர் திரு பசுபதி ஆகியோர் செய்திருந்தனர்.

***

AD/TS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2136025) வருகையாளர் எண்ணிக்கை : 10