சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுகள் 2025: தமிழ்நாட்டின் மீனவ சமுதாயம் இந்தியாவின் கடற்கரை வாலிபால் போட்டிக்கு உத்வேகம் அளிக்கிறது
प्रविष्टि तिथि:
26 MAY 2025 4:48PM by PIB Chennai
டையூவில் நடைபெற்ற கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுகள் 2025-ன் வாலிபால் போட்டிகளில் தமிழ்நாட்டின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சாம்பியன் பட்டங்களை வென்றன. இந்த விளையாட்டில் தென்னிந்திய மாநிலம் ஆதிக்கம் செலுத்துவது வழக்கமானதுதான். இருப்பினும் மணல் விளையாட்டு அரங்கிற்கு வெளியே ஒரு கதை உள்ளது. அதாவது கடற்கரை விளையாட்டு வீரர்களின் எழுச்சி இந்த மாநிலத்தின் மீனவ கிராமங்களில் இருந்து வந்துள்ளது.
2023-ம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற மத்திய ஆசிய வாலிபால் சங்கத்தின் கான்டினென்டல் கோப்பை இறுதிப்போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதைப் போல் சர்வதேச போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்த அணியில் குறிப்பாக ராபின் ரவி (வயது 23), பரத் சோமு (வயது 22) ஆகியோர் பாலவாக்கம் கடலோர சமூகத்திலிருந்து உருவானவர்கள். இந்த இரட்டையர்கள் வெள்ளியன்று (23.05.2025) நடைபெற்ற கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டில் ஆடவர் வாலிபால் போட்டியிலும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக கடற்கரை விளையாட்டுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“நாங்கள் கடற்கரையில் வாழ்கிறோம். அதுதான் எங்கள் வாழ்க்கை. நடப்பது, வேலை செய்வது, விளையாடுவது எல்லாம் மணலில்தான்” என்று ராபினும், பரத்தும் ஒரே குரலில் தெரிவித்தனர். மீனவ சமூகத்தின் மற்ற பலரைப் போலவே இவர்களின் பயணமும் அருகே உள்ள தற்காலிக விளையாட்டு அரங்குகளில் மூத்தவர்கள் வாலிபால் விளையாடுவதை பார்ப்பதிலிருந்துதான் தொடங்கியது. ராபின் 10 வயதிலும், பரத் 15 வயதிலும் இந்தப்பயணத்தை தொடங்கினர். முறைப்படியான பயிற்சியுடன் தொடங்காமல், விளையாட்டை கவனிப்பதன் மூலமும், ஆர்வத்தைக் கொண்டும் கற்றுக்கொண்டனர்.
பாலவாக்கத்தில் உள்ள சொந்தக்குடியிருப்பு பகுதியில் ஒரு விளையாட்டுத் திடலில் அவர்கள் பயிற்சிப் பெற்றனர். தங்களின் கனவு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதுதான் என்று மூத்த வாலிபால் பயிற்சியாளரும், நிர்வாகியுமான ஏ ஜே மார்டின் சுதாகர் தெரிவித்தார். இவர் கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டு 2025-க்கான போட்டி நிர்வாகியாகவும் இருந்தவர்.
2006-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வாலிபால் பிரிவில் 9-வது இடத்தை இந்தியாவுக்கு வழங்கிய பிரதீப் ஜான், மோகன் பூத்தாத்தன் ஆகியோருக்கு பயிற்சியளித்தவர் சுதாகர். ஆசிய விளையாட்டில் இந்தியாவின் வாலிபால் அணி இந்த இடத்திற்கு வந்தது இதுவே முதல்முறையாகும்.
“மீன்வலைகளை இழுப்பது, மணலில் நடப்பது, சூரிய ஒளியில் தொடர்ந்து செயல்படுவது ஆகியவை இவர்களுக்கு சரியான உடல் திறனையும், கடற்கரை வாலிபாலுக்கு தேவையான பலத்தையும் அளிக்கிறது” என்று இந்திய விளையாட்டு ஆணையத்திடம் சுதாகர் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் பதக்கங்கள் வென்ற போதும் பரத், ராபின் ஆகிய இருவரும் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள். இவர்களுக்கு அரசு வேலை கிடைத்தால் குறைந்தபட்சம் 100-150 இளைஞர்கள் இந்த சமூகத்தில் இருந்து விளையாட்டுத் துறையில் ஈடுபடுவார்கள் என்று சுதாகர் கூறினார்.
அடுத்த மாதத்தில் இருந்து மீனவ சமுதாயத்திற்கென்று 10 நாள் பிரத்யேக பயிற்சி முகாமை சென்னையில் நடத்தவிருப்பதாகவும், இந்த முயற்சி தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் நமது பங்கேற்பை அதிகரிக்கச் செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த சமூகத்திலிருந்து ஒருவர் வெற்றி பெற்றால் அனைவரும் அதை பின்பற்றுவார்கள். வாலிபால் மட்டுமல்ல அவர்கள் கடற்கரை கால்பந்து, கபடி, கிரிக்கெட் ஆகியவற்றையும் விளையாடுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
12 ஆண்டுகளாக ஆசிய கடற்கரை வாலிபால் கூட்டமைப்பு கவுன்சிலின் உறுப்பினராக உள்ள சுதாகர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கியிருப்பதாகவும், மற்ற கடலோர மாவட்டங்களும் இதனை பின்பற்றலாம் என்றும் கூறினார். ஐரோப்பிய நாடுகள் நகரங்களில் செயற்கையான மணல் விளையாட்டு அரங்குகளை உருவாக்குகின்றன. ஆனால் நம்மிடம் இயற்கையாகவே கடற்கரைகள் உள்ளன என்பதை தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ள சுதாகர் சுட்டிக்காட்டினார்.
இயற்கையாக நம்மிடம் உள்ள கடற்கரைகளை விளையாட்டுப் போட்டிகளுக்கு மதிநுட்பத்தோடு நாம் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், கருத்தரங்குகள் நடத்துவது, உள்ளூர் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது, அவர்களை மண்டல கல்வி நிறுவனங்களில் பணி அமர்த்துவது போன்றவற்றையும் செய்ய வேண்டும் என்று கூறினார். பிரேசில், அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளிலிருந்து 3 மாத காலத்திற்கு நிபுணர்களை கொண்டு வரலாம் என்று யோசனை தெரிவித்த சுதாகர், இதன் மூலம் விளையாட்டுகளை எழுச்சி பெற செய்ய முடியும் என்றார்.
கடற்கரை வாலிபால் மூலம் உலகளாவிய வாலிபால் திறனை எளிதாக வளர்க்கலாம். தற்போதைய தருணம் மிகச்சிறந்தது என்றும் இந்த விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து எதிர்காலத்தை அவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் சுதாகர் கூறினார்.


***
AD/SMB/AG/DL
(रिलीज़ आईडी: 2131401)
आगंतुक पटल : 52
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English