சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஸ்வயம் பிளஸ் மூலம் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் வல்லுநர்களுக்காக இலவச செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது

இதற்கு விண்ணப்பிக்க 12 மே 2025 கடைசி நாளாகும்

Posted On: 05 MAY 2025 2:26PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), ஸ்வயம் பிளஸ் மூலம் 5 செயற்கை நுண்ணறிவுப் படிப்புகளை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது. 25 முதல் 45 மணி நேரம் வரையிலான இப்படிப்புகள் இணையவழியில் வழங்கப்படுகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள், பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு ஏற்ற வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இப்படிப்புகளின் நோக்கமாகும். இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பு மூலம் பதிவு செய்துகொள்ளலாம். விண்ணப்பம் செய்வதற்கு மே 12, 2025 கடைசி நாளாகும்: https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses

பாடத்திட்டங்கள் பற்றிய மேலும் தகவல்களை அறிந்துகொள்ள pmu-sp@swayam2.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5 படிப்புகள் வருமாறு:

  1. இயற்பியலில் ஏஐ- இயற்பியலில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை செயற்கை நுண்ணறிவுக் கருவிகளான இயந்திரக் கற்றல் மற்றும் நியூரல் வலைப்பின்னல்களைப் பயன்படுத்தி தீர்ப்பது குறித்து ஆராய்தல். அடிப்படை இயற்பியல் கருத்துகள் குறித்து நேரடி ஆய்வகங்கள், கலந்தாலோசனைப் பயன்பாடுகளை உள்ளடக்கியது.
  2. வேதியியலில் ஏஐ- மூலக்கூறு கணிப்புகள் தொடங்கி ரசாயன எதிர்வினைகளை மாதிரிகளாக்குவது வரை- நடைமுறைத் தரவுத் தொகுப்புகள், பைதான் ஆகியவற்றைப் பயன்படுத்தி வேதியியலில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை அறிமுகப்படுத்துதல்
  3. கணக்கியலில் ஏஐ- வணிகம் மற்றும் மேலாண்மை மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இப்படிப்பு, கணக்கியல் கோட்பாடுகளை செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளுடன் இணைக்கிறது. பைதான், தரவுத் தொகுப்புகளின் நடைமுறைப் பயன்பாடு கணக்கியலில் தானியங்கி முறையை ஆராய உதவுகிறது.
  4. கிரிக்கெட் பகுப்பாய்வில் ஏஐ- பைதான், தரவு அறிவியல் கருத்துகளைப் பயன்படுத்தி விளையாட்டுப் பகுப்பாய்வில் கவனம் செலுத்துதல். மாணவர்கள் அன்றாட கிரிக்கெட் தரவுகளை கருத்தாய்வு, காட்சிப்படுத்துதல் நுட்பங்கள் மூலம் பகுப்பாய்வு செய்யக் கற்றுக் கொள்கின்றனர்.
  5. பைதானைப் பயன்படுத்தி ஏஐ/எம்ஐ- செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் ஆகியவற்றுக்கான அடிப்படைப் படிப்பு, பைதான் புரோகிராமிங், புள்ளியியல், நேரியல் இயற்கணிதம், தேர்வு முறை, நடைமுறை சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தரவுகளை காட்சிப்படுத்துதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்

இப்பாடத் திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சென்னை ஐஐடி டீன் (திட்டமிடல்) மற்றும் ஸ்வயம் பிளஸ் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஆர்.சாரதி கூறுகையில், “தேசிய கிரடிட் கட்டமைப்புடன் (என்சிஆர்எஃப்) இணைக்கப்பட்டுள்ள இப்படிப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் வரவிருக்கும் கல்வியாண்டிற்கான கிரடிட் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும். இப்படிப்புகள் பொறியியல் மாணவர்களுக்கு மட்டுமின்றி கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும், பல்வேறு பிரிவுகளிலும் செயற்கை நுண்ணறிவை அணுகக் கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.

இந்த பாடத்திட்டங்களின் சிறப்பம்சங்கள்:

  • தேசிய கிரடிட் கட்டமைப்புடன் ஒருங்கிணக்கப்பட்டது, வேலைவாய்ப்பை மையமாகக் கொண்டது.
  • நேரடிச் செயல்பாடுகள், உண்மையான தரவுத்தொகுப்புகள், மாதிரி ஆய்வுகள் அடிப்படையிலான கற்றல்.
  • சாதாரண கட்டணத்தில் சான்றிதழ் பெற வாய்ப்பு
  • திறன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக பல்கலைக்கழகம் கிரடிட் வழங்கலாம்.

தேவையான தகுதி

இந்த பாடத்திட்டங்களில் அனைத்து கல்விப் பின்னணியையும் (பொறியியல், அறிவியல், வணிகவியல், கலை, பல்துறை) சேர்ந்த இளநிலை- முதுநிலை மாணவர்கள் சேர முடியும். உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் இதில் சேர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ஏஐ குறித்த முன்கற்றல் அல்லது கோடிங் அனுபவம் தேவையில்லை, ஏனெனில் அடிப்படை டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் போதுமானதாக இருக்கும். இந்த பாடத்திட்டங்கள் சென்னை ஐஐடி சூழல் அமைப்பிலிருந்து வந்த நிபுணர்களால் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆழமான கல்வி மற்றும் தொழில்துறை அனுபவத்தைக் கொண்டிருக்கின்றனர்.

***

SMB/RR/KR

 


(Release ID: 2127009)
Read this release in: English