சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுவைப் பல்கலைக்கழகத்தில் தென்கிழக்கு ஆசியாவின் இந்திய - சம்பா பாரம்பரியம் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெற்றது
Posted On:
17 APR 2025 2:30PM by PIB Chennai

"தென்கிழக்கு ஆசியாவின் இந்தியா - சம்பா பாரம்பரியம் " என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு இன்று (17.04.2025) புதுவைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இந்த மாநாடு பல்கலைக்கழக மானியக் குழுவின் கடல்சார் ஆய்வுகளுக்கான மையம், புதுவை பல்கலைக்கழகம், தில்லியில் உள்ள இந்திய அறக்கட்டளை ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல்கலைக்கழக மானியக் குழுவின் கடல்சார் ஆய்வுகளுக்கான மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ. சுப்பிரமணியம் ராஜு அறிமுக உரையாற்றினார். இந்தியாவை ஒரு வளர்ந்து வரும் சக்தியாக மாற்றுவதில் கடல்சார் வணிகத்தின் பங்கையும், அது நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கிறது என்பதையும் பேராசிரியர் ராஜு எடுத்துரைத்தார்.
புதுவை பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் தலைவர் பேராசிரியர் ஜி.சந்திரிகா உரையாற்றுகையில், இந்தியா – வியட்நாம் நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பும், இரு நாடுகளின் கலாச்சார பன்முகத்தன்மையும் எவ்வாறு ஒன்றாக அமைந்துள்ளன என்பதை அவர் விளக்கினார்.
சம்பா நாகரிகத்தின் மரபு மூலம் இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையிலான நீடித்த கலாச்சார, கடல்சார் தொடர்புகளை, இந்திய அறக்கட்டளையின் உறுப்பினரும், வியட்நாமுக்கான முன்னாள் இந்திய தூதருமான பிரீத்தி சரண், எடுத்துரைத்தார்.
இந்தியா அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினரும், நாளந்தா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் சுனைனா சிங் சிறப்புரையாற்றினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் கிழக்குசார் கொள்கை, பெருங்கடல் முன்முயற்சி ஆகியவற்றின் பலன்களை அவர் எடுத்துரைத்தார். இந்திய அறக்கட்டளையின் கல்வி, ஆராய்ச்சிப் பிரிவு துணை இயக்குநர் டாக்டர் சிருஷ்டி புக்ரெம் நன்றியுரை நிகழ்த்தினார்.
***
AD/PLM/RR/KR
(Release ID: 2122384)