சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கடல்சார் கல்வியை நவீனமயமாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்

Posted On: 08 APR 2025 6:51PM by PIB Chennai

கடல்சார் கல்வியை நவீனமயமாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக கொச்சியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

கடல்சார் கல்வி மற்றும் அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் ஆறு வளாகங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார். கொச்சியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மொத்தம் ரூ.67.77 கோடி மதிப்பீட்டிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

முக்கிய திட்டங்களில் ஒன்றாக, கொச்சியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் ஒரு புதிய மகளிர் விடுதியை நிறுவ திரு சோனோவால் அடிக்கல் நாட்டினார். ரூ.13.11 கோடி செலவில் கட்டப்படவுள்ள இந்த விடுதியானது, கடல்சார் கல்வி பயிலும் மாணவிகளுக்கான வசிப்பிடங்களை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும்.

அதே நேரத்தில், சென்னை, கொல்கத்தா, நவி மும்பை, மும்பை துறைமுகம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ஐந்து பல்கலைக்கழக வளாகங்களில் பல உள்கட்டமைப்பு திட்டங்களையும் மத்திய அமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

பங்கேற்பாளர்களிடம் உரையாற்றிய திரு. சோனோவால், உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு மற்றும் பயிற்சிச் சூழலை கடல்சார் பல்கலைக்கழகத்தில் வழங்குவதன் மூலம், இந்தியாவில் கடல்சார் கல்வியில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற மத்திய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

"இந்த 17 திட்டங்கள் இந்தியாவின் கடல்சார் கல்வித் துறையை வலுப்படுத்துவதற்கான எங்களது முயற்சிகளில், ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கின்றன. நவீன உட்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட வசதிகளுடன், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், அவர்கள் உலகளாவிய கடல்சார் வாழ்க்கைத்தரத்தினை பின்பற்றவும் நாங்கள் உதவுகிறோம்,” என்று அவர் கூறினார்.

எர்ணாகுளம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு. ஹிபி ஈடன், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் இந்தியா போர்ட்ஸ் குளோபல் மேலாண்மை இயக்குநர் திரு சுனில் முகுந்தன், ஐ.ஆர்.எஸ்.எம்.இ., தலைவர் பி. காசி விஸ்வநாதன், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மாலினி வி.சங்கர் மற்றும் கடல்சார் கல்வித் துறையைச் சேர்ந்த பிற உயர் அதிகாரிகள் மற்றும் வளாக இயக்குநர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

***

AD/PKV/RR/KR/DL

 


(Release ID: 2120157) Visitor Counter : 11
Read this release in: English