புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்துகள், லாரிகள் குறித்த முன்னோடித் திட்டங்கள்
Posted On:
03 MAR 2025 5:31PM by PIB Chennai
தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் ஒரு பகுதியாக, பேருந்துகள், லாரிகளில் ஹைட்ரஜனைப் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கான ஐந்து முன்னோடித் திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது. முன்னதாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இந்தத் திட்டத்தின் கீழ் போக்குவரத்துத் துறையில் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
அதன்படி, பல்வேறு வகையான ஹைட்ரஜன் அடிப்படையிலான வாகனங்கள், வழித்தடங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கான திட்டங்கள் வரவேற்கப்பட்டன. விரிவான ஆய்வுக்குப் பிறகு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மொத்தம் 37 வாகனங்கள் (பேருந்துகள் மற்றும் லாரிகள்) மற்றும் 9 ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையங்களைக் கொண்ட ஐந்து முன்னோடித் திட்டங்களை அனுமதித்துள்ளது. சோதனைக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களில் 15 ஹைட்ரஜன் எரிபொருள் செல் அடிப்படையிலான வாகனங்கள் மற்றும் 22 ஹைட்ரஜன் உட்புற எரிப்பு இயந்திர அடிப்படையிலான வாகனங்கள் அடங்கும். இந்த வாகனங்கள் நாடு முழுவதும் 10 வெவ்வேறு வழித்தடங்களில் இயங்கும். அதாவது கிரேட்டர் நொய்டா - தில்லி - ஆக்ரா, புவனேஷ்வர் - கோனார்க் - பூரி, அகமதாபாத் - வதோதரா - சூரத், சாஹிபாபாத் - ஃபரிதாபாத் - தில்லி, புனே - மும்பை, ஜாம்ஷெட்பூர் - கலிங்கா நகர், திருவனந்தபுரம் - கொச்சி, கொச்சி - எடப்பள்ளி, ஜாம்நகர் - அகமதாபாத், மற்றும் தேசிய நெடுஞ்சாலை-16 விசாகப்பட்டினம் – பையாவரம் ஆகியவையாகும்.
இத்தகைய திட்டங்கள் டாடா மோட்டார்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், என்டிபிசி, ஏஎன்இஆர்டி, அசோக் லேலேண்ட், எச்பிசிஎல், பிபிசிஎல், ஐஓசிஎல் போன்ற முக்கிய நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு சுமார் ரூ. 208 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. இந்த முன்னோடித் திட்டங்கள் அடுத்த 18 முதல் 24 மாதங்களில் தொடங்கப்படும். இது இந்தியாவில் இத்தகைய தொழில்நுட்பங்களை விரிவுபடுத்த வழிவகுக்கும்.
இத் திட்டங்கள் போக்குவரத்துத் துறையில் ஹைட்ரஜனை பேருந்துகள், லாரிகளில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கும், ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பை ஆதரிப்பதற்கும் வணிக ரீதியாக சாத்தியமான தொழில்நுட்பங்களை உருவாக்குவதாகும்.
---
TS/IR/RR/DL
(Release ID: 2107893)