சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி பல்கலைக்கழகம், இத்தாலி கலாப்ரியா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 03 MAR 2025 4:58PM by PIB Chennai

புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியின் கலாப்ரியா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சி புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்தப் ஒப்பந்தத்தை, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு தொடர்பு மையத்  தலைவர் பேராசிரியர் எஸ். விக்டர் ஆனந்த்குமார் மற்றும் கலாப்ரியா பல்கலைக்கழக புரிந்துணர்வு ஒப்பந்த ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லௌரா கொராடி பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (தற்காலிக) பேராசிரியர் கே. தரணிக்கராசு, புரிந்துணர்வு ஒப்பந்த ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கமலவேணி, மற்றும் பெண்கள் ஆய்வு மையத் தலைவர் டாக்டர் ஆசிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலாப்ரியா பல்கலைக்கழகம், இத்தாலியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான பொது பல்கலைக்கழகம் ஆகும். இது ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனமாகும். 1972-ம் ஆண்டில் கொசென்ஸா அருகிலுள்ள ரெண்டே நகரத்தில் நிறுவப்பட்ட இந்த பல்கலைக்கழகம், பொறியியல், மனிதவியல், சமூக அறிவியல், இயற்கை அறிவியல் உள்ளிட்ட பல துறைகளில் முதுநிலை, மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை வழங்குகிறது. உண்டு உறைவிட வசதிகளுடன் கூடிய இத்தாலியின் சில முன்மாதிரி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மேலும், உலகளாவிய பன்னாட்டு ஒத்துழைப்புகளின் மூலம் இது பல்வேறு நாடுகளிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய, பன்னாட்டு தொடர்புகள் மையத் தலைவர் பேராசிரியர் எஸ். விக்டர் ஆனந்த்குமார், உலகளாவிய ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கான பல்கலைக்கழகத்தின் முயற்சிகளை அவர் குறிப்பிட்டார். 2023-ம் ஆண்டில் இந்தியாவிற்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஒரு திட்டமிட்ட கூட்டாண்மைக்கு உயர்த்தும் பின்னணியில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

***

IR/RR


(Release ID: 2107783) Visitor Counter : 25


Read this release in: English