வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியா-கத்தார் இடையேயான எதிர்கால கூட்டாண்மையானது நிலைத்தன்மை, தொழில்நுட்பம், தொழில்முனைவு, எரிசக்தி ஆகிய தூண்களில் நிலைத்திருக்கும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
Posted On:
18 FEB 2025 10:40AM by PIB Chennai
இந்தியா-கத்தார் இடையேயான எதிர்கால கூட்டாண்மையானது நிலைத்தன்மை, தொழில்நுட்பம், தொழில்முனைவு, எரிசக்தி ஆகிய தூண்களில் நிலைத்திருக்கும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்தியா-கத்தார் வணிக அமைப்பின் தொடக்க அமர்வில் உரையாற்றியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார். இந்த அமர்வில், கத்தார் அரசின் தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் திரு ஷேக் ஃபைசல் பின் தானி பின் ஃபைசல் அல் தானி கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையின் அடித்தளமாக நம்பிக்கை, வர்த்தகம், பாரம்பரியம் ஆகியவை உள்ளன என்று திரு கோயல் குறிப்பிட்டார். எரிசக்தி முதல், வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆப் திங்ஸ், குவாண்டம் கண்டக்டிங், செமி கண்டக்டர் வரையில் வர்த்தகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக அவர் கூறினார். புவிசார் அரசியல் பதற்றம், பருவநிலை மாற்றம், சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்ற உலகளாவிய சூழலில் ஒட்டு மொத்த உலகமும் மாற்றம் பெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
வர்த்தகம், முதலீடுகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் பற்றி குறிப்பிட்ட திரு கோயல், கத்தார் வணிக சங்கத்துக்கும் இந்தியத் தொழில்கள் கூட்டமைப்புகளுக்கு இடையேயும் இன்வெஸ்ட் கத்தார், இன்வெஸ்ட் இந்தியா அமைப்புகளுக்கு இடையேயும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதையும் எடுத்துரைத்தார். வர்த்தகம் மற்றும் வணிகம் குறித்த கூட்டுப் பணிக்குழு அமைச்சர்கள் நிலையில் முன்னேற்றம் கண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கத்தார் தொலைநோக்குப் பார்வை 2030-ம், இந்தியாவின் வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ம் இரு நாட்டு மக்களின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
***
(Release ID: 2104278)
TS/SMB/RR/KR
(Release ID: 2104294)
Visitor Counter : 25