ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனைவரும் பயணம் செய்யலாம், குறைந்த செலவில் சிறந்த தரம்! – அம்ரித் பாரத் 2.0 தொடக்கம்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் சென்னையில் பேட்டி

Posted On: 10 JAN 2025 1:23PM by PIB Chennai

குறைந்த வருவாய் உள்ளவர்களும் பயன்படுத்தி பயணம் செய்யும் வகையில் அம்ரித் பாரத் 2.0 தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சரும், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சருமான திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று இணைப்பு ரயில் பெட்டி தொழிற்சாலை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்த அம்ரித் பாரத் 1.0 அனுபவ அடிப்படையிலும், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அனுபவ அடிப்படையிலும் அம்ரித் பாரத் 2.0 வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த ரயில் வண்டியில் 12 முக்கியமான சிறப்பம்சங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 

 

பாதி அளவு தானியங்கி ரயில் பெட்டி இணைப்பான்கள், நவீன கழிப்பறைகள், புது வகையான கட்டுமானப் பொருட்கள், இருக்கை மற்றும் படுக்கை அருகே வலுவான தூண்கள், அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கும் அம்சங்கள், நவீன பிரேக் வசதிகள், வந்தே பாரத் போன்று தொடர்ச்சியான விளக்கொளி அமைப்பு, தீயை கண்டறியும் கருவி, வெளிப்புற அவசர கால விளக்குகள், செல்பேசிகளுக்கு மின்னேற்றி சாதனங்கள், செல்பேசிகளை பொருத்தி வைக்கும் பெட்டிகள் போன்றவை அம்ரித் பாரத் 2.0-ன் முக்கிய அம்சங்களாகும். இவற்றில் பல அம்சங்கள் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருப்பதோடு, பாதுகாப்பாகவும் இருக்கும்.

இத்தகைய 50 ரயில் வண்டிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பிரதமரின் “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் அம்ரித் பாரத் ரயில் வண்டிகள் மிகவும் குறைந்த செலவில் நிறைவான சேவையை மக்களுக்கு வழங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார். தொலை தூரம் பயணம் செய்வோருக்கு உயர்தரமான சேவையை வழங்கும் இந்த ரயில்கள் மிகச் சிறந்த பயண அனுபவத்தை அளிக்கும் என்று அவர் கூறினார்.

 

 

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக விபத்தை தடுக்கும் கவச் கருவிகள் இதுவரை 10,000 ரயில் என்ஜின்களில் பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். சென்னை அருகே பாயிண்ட் கருவியிலிருந்து மரை (போல்ட்) கழற்றப்பட்டதை முன்கூட்டியே கண்டறிந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டதை நினைவுகூர்ந்த அமைச்சர், தற்போது புதிய வடிவமைப்பில் இத்தகைய மரைகள் தயாரிக்கப்பட்டு பாயிண்ட் கருவியில் பொருத்தப்படுவதாகவும், யாராலும் இதனை அகற்ற இயலாது என்றும் தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜம்முவுக்கும். காஷ்மீருக்கும் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றிருப்பதன் மூலம் ஒரு கனவு நனவாகி உள்ளது என்றார். 100  கிலோ மீட்டருக்கும் அதிக தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில் சுமார் 97 கிலோ மீட்டர் சுரங்கங்களும், சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலங்களும் அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்தப் பாதையில் ரயில் போக்குவரத்துக்காக வேகப் பரிசோதனையை பாதுகாப்பு ஆணையர் நிறைவு செய்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

 

இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் புதுவாயல் கிராமத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா திடகார் தனியார் தொழிற்சாலையில் ரயில் சக்கரங்கள் தயாரிப்பை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, தெற்கு ரயில்வே பொது மேலாளர் திரு ஆர்.என்.சிங், ஐசிஎஃப் பொது மேலாளர் திரு சுபராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ரயில்வே துறைக்கு சக்தி வாய்ந்த, மிகவும் உறுதியான 80,000 ரயில் சக்கரங்கள் தேவைப்படுவதாகவும் இதற்காக “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரயில் சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். இந்த நிறுவனம் 2026, பிப்ரவரி மாதத்தில் உற்பத்தியை தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் சக்கரங்கள் உள்நாட்டு பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

 

 

***

VL/SMB/RR/KR


(Release ID: 2091726) Visitor Counter : 49