சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தேசிய ஆயுஷ் இயக்கத்தை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்

Posted On: 19 DEC 2024 3:12PM by PIB Chennai

தேசிய ஆயுஷ் இயக்கத்தை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர்  திரு பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். 8-வது தேசிய சித்த மருத்துவ தினம் இன்று (19.12.2024) கொண்டாடப்பட்டது.

 

இதனையொட்டி மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழ்நாட்டின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கில் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் காணொலிக் காட்சி வாயிலாக  உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய மருத்துவ முறைகளுக்காக தனி அமைச்சகம் உருவாக்கியிருப்பதாக தெரிவித்தார். இந்த மருத்துவ முறைகளை ஊக்குவிக்க கடந்த எட்டு ஆண்டுகளில் ஆயுஷ் அமைச்சகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்று காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவ முறைகள் மிகுந்த பயன் அளித்ததாக அவர் குறிப்பிட்டார். தேசிய ஆயுஷ் இயக்கத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்தார்.

 

நிகழ்ச்சியில் ஆயுஷ்துறைச் செயலாளர் திரு வைத்திய  ராஜேஷ் கோட்டெச்சா, பாரதத்தின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு நூலின் மூன்றாவது பாகம் (தமிழில்), எட்டாவது சித்த மருத்துவ தின விழா மலர் ஆகியவற்றை வெளியிட்டார்.

விழாவில் அவர் சித்த மருத்துவ மாணவர்களுக்கான இந்திய அரசின், சிறு ஆராய்ச்சி திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு, முறையே ரூ. 20 ஆயிரம் (10 இளநிலை மாணவர்களுக்கு), ரூ. 30 ஆயிரம் (05 முதுநிலை மாணவர்களுக்கு) ஆராய்ச்சி உதவித்தொகையை வழங்கினார்.

 

மேலும் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் பாராட்டு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். சித்த மருத்துவ கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அவர் தெரிவித்தார். நாட்டில் கிட்டத்தட்ட 900-க்கும் மேற்பட்ட ஆயுஷ் புத்தொழில் நிறுவனங்கள் செயல்படுவதாகவும் இத்துறை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இத்துறைக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் கிராம பகுதிகளில் 90 சதவீத மக்களும் நகர்புறங்களில் 95 சதவீத மக்களும் ஆயுஷ் மருத்துவத்தை பற்றி நன்கு அறிந்துள்ளதாகவும் இவர்களில் 50 சதவீதம் பேர் ஆயுஷ் மருத்துவ முறைகளைப் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இது ஆயுஷ் மருத்துவத்தின் பொற்காலம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆயுஷ் மருத்துவ முறைகளின் பயன்களைப் பெற 22 செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் திரு வைத்திய ராஜேஷ் கொட்டெச்சா தெரிவித்தார்.

எட்டாவது சித்த மருத்துவ தினத்தையொட்டி சித்த மருத்துவ அமர்வுகள், மூலிகை கண்காட்சிகள் போன்றவையும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர் என்.ஜே. முத்துக்குமார், சித்த மருத்துவ வல்லுநர்கள், சித்த மருத்துவ பேராசிரியர்கள், சித்த மருத்துவர்கள், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், சித்த மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 1600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

***

AD/PLM/AG/RR


(Release ID: 2085987) Visitor Counter : 110


Read this release in: English