சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
“சென்னையில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர், கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்திற்கு விருதுநகர் மாவட்டப் பள்ளி மாணாக்கர்களின் அறிவியல் களப்பயணம்”
Posted On:
05 DEC 2024 6:08PM by PIB Chennai
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளி மாணாக்கர்கள் 100 பேர் மற்றும் ஆசிரியர்கள் 14 பேர் அடங்கிய குழுவினர், சென்னையில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர், கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தை இன்று (5.12.2024) பார்வையிட்டனர்.
மூன்று நாள் அறிவியல் களப்பயணமாக சென்னை வந்துள்ள மாணாக்கர்கள், மூன்றாம் நாளில் சி.எஸ்.ஐ.ஆர் செய்து வருகின்ற பல்வேறு ஆராய்ச்சிகளை பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் எதிர்காலங்களில் விஞ்ஞானிகளாக உருவாகவும் ஆர்வமாக இக்களப்பயணத்தில் பங்கேற்றனர். குறிப்பாக ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள், கட்டமைப்பு பொறியியல் துறையில் செய்து வருகின்ற முக்கியமான ஆராய்ச்சிகள் அதன் மூலம் இந்தியாவில் ஏற்பட்டு வரும் வளர்ச்சிகள் பற்றி பள்ளி மாணாக்கர்களிடம் கலந்துரையாடினர். மாணாக்கர்கள் அனைவரும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் இடங்களை நேரடியாக பார்த்து பல்வேறு அரிய தகவல்களை தெரிந்து கொண்டனர்.
கட்டமைப்பு பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் (திருமதி) ஆனந்தவல்லியின் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணாக்கர்கள் தங்களை ஆராய்ச்சி துறையில் எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்ள முடியும் என்பது பற்றியும் பள்ளி பருவத்தில் இருந்தே அறிவியல் துறையில் ஆர்வத்தையும் ஆராய்ச்சி துறையில் ஈடுபாட்டையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இக்களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி-யின் தலைமை விஞ்ஞானி மற்றும் ஆலோசகர் முனைவர். பாரிவள்ளல் முன்னிலை வகித்தார். மூத்த முதன்மை விஞ்ஞானி, முனைவர். S. மகேஸ்வரன், சி.எஸ்.ஐ.ஆர் கட்டமைப்பு பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளான திரு இரா. த. சதீஷ்குமார், திரு. A.K. ஃபர்வேஸ் அஹமது, முனைவர். S. சுந்தர் குமார், திரு. E. அசோக்குமார், உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த களப்பயணம் குறித்து மாணவர்கள் கூறும் போது, கிராமப்புறத்தில் இருந்து வந்த எங்களுக்கு இது போன்ற அறிவியல்சார் நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொண்டது அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருந்தது என்று கூறினர்.
இக்களப்பயணத்தின் முழு நிகழ்வும் கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்,மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் ஒருங்கிணைத்தார்.



***
PKV/DL
(Release ID: 2081202)
Visitor Counter : 111