மக்களவை செயலகம்
டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களவை சபாநாயகரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு மரியாதை செலுத்தினர்
Posted On:
03 DEC 2024 8:44PM by PIB Chennai
இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா, சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு மரியாதை செலுத்தினர்கள். மக்களவை பொதுச் செயலாளர் திரு உத்பால் குமார் சிங் மற்றும் மாநிலங்களவை பொதுச் செயலாளர், திரு பி.சி. மோடி ஆகியோரும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முன்னதாக, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு அஞ்சலி செலுத்தி திரு பிர்லா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
"பாரத ரத்னா டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். டாக்டர் ராஜேந்திர பிரசாத், நாட்டின் சுதந்திர போராட்ட இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். புகழ்பெற்ற சட்ட வல்லுநரும், திறமையான நிர்வாகியும், தலைசிறந்த அறிவாளியுமான டாக்டர் ராஜேந்திர பிரசாத், தமது தேசிய வாழ்விலும், அரசியலிலும் அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். அரசியல் நிர்ணய சபையின் தலைவர் என்ற முறையில், அவர் தனது கடமைகளை விவேகத்துடனும், புலமையுடனும், பாரபட்சமின்றியும் முறையாக நிறைவேற்றினார். நாட்டின் முதல் குடியரசுத்தலைவராக, அரசியலமைப்பு நிறுவனங்களை வலுப்படுத்துவதிலும், அதிகாரம் அளிப்பதிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். நமது நாட்டில் சிறந்த ஜனநாயக பாரம்பரியத்தை நிறுவுவதில் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. சேவை, எளிமை, பணிவு, தியாகம் மற்றும் மாண்புகள் போன்ற அவரது சிறந்த பண்புகள் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் முன்மாதிரியாக உள்ளன. அத்தகைய சிறந்த தேசபக்தருக்கும், சிறந்த ராஜதந்திரிக்கும் மரியாதை செலுத்துகிறேன்.”
மக்களவை செயலகத்தால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய கையேடு, விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது.
டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் உருவப்படம், 1964 மே 5 அன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அப்போதைய இந்தியக் குடியரசுத்தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
***********
TS/BR/KV
(Release ID: 2080495)
Visitor Counter : 23