கூட்டுறவு அமைச்சகம்
தொடக்கக் கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்குதல் மற்றும் வலுப்படுத்துதல்
Posted On:
03 DEC 2024 3:40PM by PIB Chennai
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, ரூ.2,516 கோடி நிதி ஒதுக்கீட்டில், செயல்பாட்டில் உள்ள தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், செயல்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களையும், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலமாக, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியுடன் (நபார்டு) இணைக்க வகை செய்யப்பட்டுள்ளது.தொழில்நிறுவன வள திட்டமிடல் அடிப்படையிலான பொதுவான தேசிய மென்பொருள், பொது கணக்கியல் அமைப்பு (CAS) மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு (MIS) மூலம் தொடக்க வேளாண் கடன் சங்க செயல்பாட்டில், செயல்திறனைக் ஏற்படுத்துகிறது. இதுவரை, 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலிருந்து 67,930 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்குவதற்கான முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ. 865.81 கோடி சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் பங்காக ரூ.699.89 கோடியும், நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி செயல்படுத்தும் நிறுவனமான நபார்டு அவ்வப்போது வழங்கும் ரூ.165.925 கோடியும் அடங்கும்.
இதன்படி கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.107.99 கோடி ஒதுக்கப்பட்டு, 45.68 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.29.23 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மாநில வாரியாக இதுவரை கணினிமயமாக்கப்பட்ட மற்றும் இன்னும் கணினிமயமாக்கப்படாத தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கையை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 4,532 சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு வன்பொருள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 4530 சங்கங்களின் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளன. கடந்த நவம்பர் 21-ம் தேதி வரை 4,494 சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்னும் 38 சங்கங்கள் மட்டுமே இஆர்பி-ல் இணையவேண்டியுள்ளது.
2022-23 முதல் 2026-27 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு செயல்படும் தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை (PACS) கணினிமயமாக்குவதற்கான மத்திய நிதியுதவித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. எனவே, திட்டத்திற்கான செயல்பாட்டு காலம் 31.03.2027 ஆகும்
தொழில் நிறுவன வள திட்டமிடலில் பயிற்சி பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகள் / ஊழியர்களின் எண்ணிக்கை 26,882 ஆகும்.திட்ட வழிகாட்டுதல்களின்படி, பிஏசிஎஸ் மூலம் அவுட்சோர்சிங் ஊழியர்களை பணியமர்த்துவதற்கான நிதி ஆதரவுக்கு எந்த ஏற்பாடும் இல்லை.
கூட்டுறவு அமைச்சகம், 2021ஜூலை 6ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து, கூட்டுறவு இயக்கத்தை அடிமட்ட நிலையில் வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் பல முயற்சிகளை எடுத்துள்ளது. இதில் திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறையின் பல்வேறு பங்குதாரர்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு பயிற்சி ஆகியவை உள்ளடங்கும். உதாரணமாக "PACS க்கான மாதிரி துணை விதிகள், பல்பரிமாண மற்றும் வெளிப்படையான நிறுவனங்கள்", "புதிய பல்நோக்கு பொதுக் கட்டுப்பாட்டு சங்கங்கள் / பால்பண்ணை / மீன்வள கூட்டுறவு சங்கங்களை நிறுவுதல்", "கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய பரவலாக்கப்பட்ட தானிய சேமிப்புத் திட்டத்திற்கான முன்னோடித் திட்டம்", "மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகங்களை கணினிமயமாக்குதல்", "வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்குதல்", "செயல்படும் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களை கணினிமயமாக்குதல்", "தேசிய கூட்டுறவு தரவுத்தளம்", "பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (எம்.எஸ்.சி.எஸ்) சட்டம், 2002-ன் திருத்தம்", "வருமான வரிச் சட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு நிவாரணங்கள்", "கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் புத்துயிரூட்டலுக்கான முயற்சிகள்", "விதை, கரிம பொருட்கள் மற்றும் ஏற்றுமதிக்காக மூன்று புதிய தேசிய அளவிலான பல மாநில கூட்டுறவு சங்கங்களை நிறுவுதல்" போன்றவற்றை குறிப்பிடலாம். இந்த முக்கிய முயற்சிகள் குறித்த விவரங்கள்இணைப்பு-3ல் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக அடிமட்ட அளவில் கணினிமயமாக்கலின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு கூட்டுறவு அமைச்சகம் பல அடுக்கு கொண்ட அணுகுமுறையை பின்பற்றுகிறது. தொடக்கக் கணக்கை கணினிமயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. நபார்டு, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் இதர பங்குதாரர்கள் தங்களது தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் மற்றும் அமைப்புகள் மூலம், பல்வேறு முயற்சிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய இணைக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவிலான கண்காணிப்பு மற்றும் செயலாக்கக் குழு (NLMIC), மாநில மற்றும் மாவட்ட அளவிலான செயலாக்கம் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் (SLIMC மற்றும் DLIMC) குறிப்பாக PACS கணினிமயமாக்கல் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில கூட்டுறவு வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அமைச்சகத்தின் தொடக்கக் கணக்கு சங்கங்களை கணினிமயமாக்குதல் உட்பட அனைத்து முன்முயற்சிகளையும் திறம்பட செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் தலைமையில் மாவட்ட கூட்டுறவு வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், நிதி ஆயோக், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் மத்திய நிதியுதவி திட்டங்களை (CSS) மதிப்பீடு செய்து வருகிறது. இதற்கான கடிதம் 21.10.2024 அன்று அரசு மின்னணு சந்தை வலைதளத்தில் நாப்கான்சஸ் (நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்)-க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சகத்தின் "PACS-ஐ கணினிமயமாக்குதல்" மற்றும் "தகவல் தொழில்நுட்ப தலையீடுகள் மூலம் கூட்டுறவுகளை வலுப்படுத்துதல்" திட்டங்கள் தாக்க மதிப்பீட்டில் அடங்கும்.
தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) நாட்டின் குறுகிய கால கூட்டுறவு கடன் கட்டமைப்பின் (எஸ்.டி.சி.சி.எஸ்) மிகக் குறைந்த அடுக்கைக் கொண்டுள்ளன. அவை முதன்மையாக குறுகிய கால மற்றும் நடுத்தர கால கடன் வசதி மற்றும் விதை, உரம், பூச்சிக்கொல்லி விநியோகம் போன்ற பிற உள்ளீட்டு சேவைகளை உறுப்பினர் விவசாயிகளுக்கு வழங்குகின்றன. தற்போது, சுமார் 13 கோடி விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களோடு இணைக்கப்பட்டுள்ளனர். அடிமட்ட அளவிலான கூட்டுறவு நிறுவனங்களாக இருப்பதால், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிறுவனக் கடன்களை வழங்குவதன் மூலம் நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் பிஏசிஎஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடக்கக் கணக்குத் திட்டத்தை கணினிமயமாக்கியதன் மூலம் மேம்பட்ட ஆளுகை மற்றும் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டு, கடன்களை விரைவாக வழங்கவும், பரிவர்த்தனை செலவு குறையவும், பணம் செலுத்துவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் களையவும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகளுடன் தடையற்ற கணக்கு வைக்கவும் வழிவகுத்தது. இது விவசாயிகளிடையே PACS செயல்பாட்டில் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது, இதனால் " கூட்டுறவு மூலம் வளமை(சஹாகர் சே சம்ரிதி)" என்ற தொலைநோக்கை நனவாக்க பங்களிக்கிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2080081
***
TS/MM/AG/KR/DL
(Release ID: 2080229)
Visitor Counter : 37