தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
அரசியல் சாசன தினம் 2024
ஒற்றுமை, ஜனநாயக உணர்வுகளைக் கொண்டாடுதல்
Posted On:
25 NOV 2024 12:28PM by PIB Chennai
1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது, நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாகும். இது சுயாட்சி, ஜனநாயகம் ஆகியவற்றின் விடியலைக் குறிக்கும் நாளாகும். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக, நாட்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர்கள் சிலர் தில்லியில் உள்ள அரசியலமைப்பு சபை மண்டபத்தில் கூடி, தொடர் விவாதங்களில் ஈடுபட்டு இந்த அரசியல் சாசனத்தை உருவாக்கினர். இதன் மூலம், சுதந்திரம் பெற்ற இந்தியாவின் அடித்தளத்தை செம்மைப்படுத்தினர். இந்த ஆவணம் ஆட்சி கட்டமைப்பை வரையறுப்பது மட்டுமல்லாமல், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பண்புகளின் கீழ் கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கைகள், கனவுகள், எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. நமது அரசியல் சாசனம் வளர்ந்து வரும் சமூக, அரசியல், பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாட்டின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறது.
அரசியலமைப்பு என்பது சுயராஜ்யத்தின் கொண்டாட்டமாகும். இது ஒரு காலனித்துவ ஆட்சியிலிருந்து இறையாண்மை கொண்ட ஜனநாயகத்திற்கு இந்தியா மாறியதைக் குறிப்பதுடன், மக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தியை உறுதிப்படுத்துகிறது. ஜனநாயக நடைமுறைகளை நிறுவனமயமாக்குவதன் மூலம், மக்கள் ஆட்சியில் பங்கேற்கவும், தங்கள் உரிமைகளை நிலைநிறுத்தவும், தங்கள் தலைவர்களிடமிருந்து பொறுப்புடைமையைக் கோரவும் இது அதிகாரம் அளிக்கிறது.
ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று அரசியல் சாசன தினமாகக் கொண்டாடப்படுவது நமது நீடித்த பாரம்பரியத்தை நமக்கு நினைவூட்டுகிறது. 2015-ம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் இந்த நாள், மக்கள் தங்கள் உரிமைகளைப் புரிந்துகொண்டு அரசியலமைப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளபடி தங்கள் கடமைகளை நிறைவேற்ற இது அழைக்கிறது.
பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள் பரவியுள்ள இணையற்ற பன்முகத்தன்மை கொண்ட நிலத்தில், இந்திய அரசியலமைப்பு ஒரு ஒன்றிணைக்கும் சக்தியாக திகழ்கிறது! இது சமகால சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. அதே நேரத்தில் காலத்தால் மாறாத மதிப்புகளை நிலைநிறுத்துகிறது.
இந்திய அரசியலமைப்பு ஒரு வாழும் ஆவணமாகவும் வேகமாக மாறிவரும் உலகில் மாற்றத்துக்கு ஏற்ப தகவமைப்பு கொண்ட ஆவணமாகவும் இது இருக்கின்றது. நிலையான சட்ட கட்டமைப்பாக இல்லாமல், ஆளுகை, தனிநபர் அதிகாரமளித்தல், சமூக மாற்றம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ஆற்றல்மிக்க, பன்முகத்தன்மை கொண்ட தேசத்தின் உணர்வை இது உள்ளடக்கியுள்ளது. நெருக்கடியான தருணங்களில், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், தேசத்திற்கு வழிகாட்டும் ஒளியாகவும் தனது பங்கை அரசியலமைப்பு மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அரசியலமைப்பின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அதன் தகவமைப்பு. இன்றுவரை 105 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமூகம், தொழில்நுட்பம், உலகளாவிய முன்னேற்றங்கள் ஆகியவற்றின் மாறும் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இது உருவாகப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதன் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாக்கிறது. இந்த தகவமைப்பு அதன் தொலைநோக்கை எடுத்துக் காட்டுகிறது. அதன் முக்கிய லட்சியங்களை சமரசம் செய்யாமல் பொருத்தமான, பயனுள்ள நிர்வாக கருவியாக இருக்க அனுமதிக்கிறது. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு தேசத்திற்கு, அரசியலமைப்பு ஒரு வாக்குறுதியாகும். இது கலாச்சாரங்கள், மொழிகள், மரபுகளின் சாரத்தை இணைக்கிறது
அரசியல் சாசன தினத்தை நாம் அனுசரிக்கும் வேளையில், 1949 -ம் ஆண்டில் இந்த மகத்தான ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தருணத்திற்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். கடந்த காலத்தைக் கொண்டாடுவதற்கும், நிகழ்காலத்தில் அதை போற்றுவதற்கும், எதிர்காலத்திற்கு நம்மை அர்ப்பணிப்பதற்கும் இது ஒரு முக்கிய நாளாக அமைந்துள்ளது. அரசியல் சாசனம் என்பது அரசு அல்லது நீதித்துறை தொடர்பானது மட்டுமல்ல. அது ஒரு கூட்டுப் பொறுப்பு. பகிரப்பட்ட மரபுகள் மூலம் நம் அனைவரையும் இணைக்கும் ஒரு அம்சமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076754
***
TS/PLM/AG/KR
(Release ID: 2076823)
Visitor Counter : 16