சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ், மனித ஆற்றலை அதிகரிக்கும் வகையில், ‘மனிதர்களை அடிப்படையாக கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை’த் தொடங்கியுள்ளது
Posted On:
25 NOV 2024 1:57PM by PIB Chennai
ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன், ‘மனிதனை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை’த் தொடங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள மனித ஆற்றலை அதிகரிக்கச் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட உள்ளது.
தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உதவுவது உள்ளிட்டவை இந்த மையத்தின் செயல்பாடுகளில் அடங்கும்.
செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு என்பது கொள்கை வகுப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மத்தியில் வளர்ந்துவரும் முக்கிய கவலையாகும். கட்டுப்பாடுகளுக்கும் புதுமைகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது முக்கியமான ஒன்று. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்யும் வகையில், எதிர்கால விதிமுறைகளை வகுப்பதில் உள்ள பிரச்சனைகளைக் கண்டறிய இந்த மையம் உதவிகரமாக இருக்கும்.
இம்மையத்தின் தாய் அமைப்பான ஐஐடி-எம் பிரவர்த்தக், மாண்புமிகு உச்சநீதிமன்றம், இந்திய நாடாளுமன்றம் (சன்சத் டிவி வழியாக), இந்திய ராணுவம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டப் பணிகளில் இந்த மையம் பணியாற்றி வருகிறது.
தட்சிண் பாரத் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார் AVSM, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐஐடி-எம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் எம்.ஜே.சங்கர் ராமன், CHAI தலைமை விஞ்ஞானி பேராசிரியர் கவுரவ் ரெய்னா மற்றும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இதர தொடர்புடையோர் முன்னிலையில் இந்த மையம் நவம்பர் 14, 2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த மையத்தின் எதிர்பார்ப்புகள் குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, “மனித மையப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் இறுதிப் பயனர்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உள்ளதாகவே தெரிகிறது. செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை ஈடுபடுத்துவதன் பல்வேறு அம்சங்களை, குறிப்பாக விளக்கத்திறன், பொறுப்புக் கண்ணோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கவனிக்கும் விதத்தில் CHAI-ன் பணிகள் அமைந்திருக்கும்” எனக் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய தட்சிண் பாரத் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார் AVSM கூறுகையில், மனிதகுலத்திற்கு சேவை செய்யவும், வாழ்க்கையை உயர்த்தவும், அனைவருக்கும் ஏற்றவகையில் சிறந்ததொரு உலகை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவு சேவையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதில் இந்த மையம் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த புதிய மையம் மத்திய-மாநில அரசு நிறுவனங்கள், தொழில்துறை, ஸ்டார்ட்அப்கள், கல்வி ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி, இந்தியாவில் மனித ஆற்றலை மேம்படுத்தவும், பெருக்கவும் தீர்வுகளை வழங்கும். இப்படி உருவாக்கப்பட்ட தீர்வுகள், கற்றுக் கொண்ட பாடங்களை பிற நாடுகளிலும் பயன்படுத்தலாம்.
இம்மையத்தின் நோக்கம் மூன்று பரிமாணங்களை மையமாகக் கொண்டிருக்கும். மனித ஆற்றலை மேம்படுத்துதல், மக்களைப் பாதுகாத்தல், கலாச்சாரம்- பாரம்பரியத்தின் மூலம் பொதிந்துள்ள சமூக மதிப்பைப் பெருக்குதல்
மையத்தின் தலைமை விஞ்ஞானியும், ஐஐடி மெட்ராஸ் மின்பொறியியல் துறை ஆசிரியருமான பேராசிரியர் கவுரவ் ரெய்னா மேலும் கூறுகையில், “மனித மையத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தும் தொழில்துறை 5.0-வின் பரந்த கொள்கைகளோடு இந்த மையத்தின் கவனம் ஒத்ததாக இருக்கிறது. மையத்தின் நோக்கத்துடன் இணைந்த பகுதிகளில் தரவுத் தொகுப்புகள், செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், கருவிகள், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் போன்ற வடிவங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்வுகளுக்கு வழிவகுக்கும் வகையில் பயனுள்ள ஆராய்ச்சியில் கவனம் செலுத்தப்படும்” என்றார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சில முக்கிய பகுதிகள் வருமாறு:
- மொழி மாதிரிகள்: சிறிய, டொமைன் பற்றிய, சூழல்சார் தரவுத் தொகுப்புகளுக்கு பொருத்தமான சிறய மொழி மாதிரிகள் குறித்து கவனம் செலுத்தப்படும்
- மொழிகள்: பொதுவாக ஆங்கிலம் அல்லாத- குறிப்பாக இந்திய மொழிகள்- உள்நாட்டு அளவில் தொடங்க உதவிகரமாக இருந்தாலும், இறுதியில் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
- பொறுப்பான, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு: தனியுரிமை, சார்புகள், நெறிமுறைக் கருத்தாய்வுகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதில் எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கவனம் செலுத்தும். பொறுப்பான செயற்கை நுண்ணறிவு மீதான இந்த முக்கியத்துவம் எங்களின் தீர்வுகள் புதுமையானதாகவும், நெறிமுறை சார்ந்த்தாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதை, உறுதி செய்யும்.
செயற்கை நுண்ணறிவில் திறன் மேம்பாடு
நாடு முழுவதும் உள்ள மாணாக்கர்களுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் மற்றும் தீர்வுகளில் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த மையம் வாய்ப்பாக அமையும். ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள மாணவ-மாணவிகள் தங்களின் இளங்கலை, முதுகலை, பிஎச்டி ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் போன்றவைகளை இம்மையத்தின் வழிகாட்டுதலுடன் தொடரலாம். செயற்கை நுண்ணறிவில் திறமை படைத்தவர்களுக்கு தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள இது உதவிகரமாக இருக்கும்.
பயன்பாட்டு டொமைன்கள்
கல்வி, சுகாதாரம், நிதிச் சேவைகள், போக்குவரத்து, சட்டப்பூர்வ பரிசீலனைகள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளில் மனித ஆற்றலை மேம்படுத்த முடியும்.
விண்ணப்பங்களில் இணையப் பாதுகாப்பு, இணைய மோசடி மற்றும் தவறான தகவல் பாதுகாப்பு போன்ற குடிமக்களைப் பாதுகாக்கும் அம்சங்கள் இடம்பெறும். ஜனநாயகத்தை வலுப்படுத்த இத்தகைய பயன்பாடுகள் முக்கியமானதாக இருக்கும்.
கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்காக, செயற்கை நுண்ணறிவு போன்ற கருவிகளின் உதவியுடன் நமது செழிப்புமிக்க கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், புதுப்பிக்கவும், பரவலாகப் பகிர்ந்து கொள்ளவும் முடியும் என நம்புகிறோம்.
ஐஐடி-எம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் என்பது சென்சார்கள், நெட்வொர்க்கிங், ஆக்சுவேட்டர்ஸ் அண்ட் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் போன்றவைகளில் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையத்தை உள்ளடக்கிய செக்சன்-8 நிறுவனமாகும். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் சைபர்-ஃபிசிக்கல் சிஸ்டம்ஸ் தொடர்பான பல்துறை தேசிய இயக்கத்தின் கீழ் இதற்கு நிதியுதவி வழங்கப்பட்டு, ஐஐடி மெட்ராஸ் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
***
(Release ID: 2076806)
Visitor Counter : 19