தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
திரு அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர்: இந்திய அரசியல் சட்டக் கட்டமைப்பின் தூண்
Posted On:
22 NOV 2024 4:14PM by PIB Chennai
அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர் 1883 ஆம் ஆண்டு மே 14-ம் தேதி ஆந்திராவின் புதூர் கிராமத்தில் பிறந்தார். புகழ்பெற்ற சட்டவியலாளராகவும், இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கியமானவராகவும் விளங்கினார். அவர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் வரலாறு பயின்றார். அங்கு கல்வியில் சிறந்து விளங்கிய அவர் அதே பாடத்தில் ஆசிரியர் நிலைக்கு உயர்ந்தார். பணியையும், கல்வியையும் சமன்படுத்தி பி.எல். பட்டப் படிப்பை நிறைவு செய்தார். இது அவரின் புகழ்பெற்ற சட்ட வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
அய்யரின் தொழில்முறை பயணம் குறிப்பிடத்தக்கது. அவர் வழக்கறிஞர் சங்கத்தின் முக்கிய உறுப்பினரானார். 1929 முதல் 1944 வரை சென்னை மாகாணத்தின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். சட்ட சீர்திருத்தத்தில் இவரது பங்களிப்புகளில், 1929 ஆம் ஆண்டின் கூட்டாண்மை மற்றும் பொருட்களின் விற்பனை பற்றிய சட்டங்களில் திருத்தம் செய்ய நியமிக்கப்பட்ட இந்திய அரசாங்கக் குழுவில் அவரது பங்கும் அடங்கும்.
1930-ல் திவான் பகதூர் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1932-ல் வழங்கப்பட்ட நைட்ஹுட் பட்டத்தை பின்னர் இந்திய சுதந்திர இயக்கத்துடனான ஒருமைப்பாட்டின் அடையாளமாக துறந்தார். அய்யர் தனது தாராள மனப்பான்மைக்காகவும் நன்கு அறியப்பட்டார். இளம் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். அவரது நூலகத்தை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றினார்.
சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்கவில்லை என்றாலும், அய்யரின் சட்ட நிபுணத்துவம் காரணமாக அரசியல் நிர்ணய சபையில் அவருக்கு இடம் கிடைத்தது. காங்கிரஸ் சார்பில் சென்னை மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த அவர் அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் கணிசமான பங்களிப்பை வழங்கினார்.
வரைவுக் குழு, ஆலோசனைக் குழு, அடிப்படை உரிமைகள் தொடர்பான உப குழு உட்பட ஒன்பது முக்கியமான குழுக்களின் உறுப்பினர் என்ற முறையில் குடியுரிமை, அடிப்படை உரிமைகள் மற்றும் அவசரகால நடவடிக்கைகள் பற்றிய விதிகளை வடிவமைப்பதில் அய்யர் முக்கிய பங்கு வகித்தார். ஜனநாயக கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கும் அதேவேளையில், அரசியலமைப்பு சட்டம் தேசத்தின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்வதை அவரது நுண்ணறிவும் கடுமையான உழைப்பும் உறுதி செய்தன.
அரசியல் நிர்ணய சபையில் தனது பணியை முடித்த பின்னர், அய்யர் பொதுவாழ்விலிருந்து ஓய்வு பெற்றார். சட்ட ஞானத்தில் மேன்மையான பாரம்பரியத்தையும், அரசியலமைப்பில் தொலைநோக்குப் பார்வையையும் கொண்டிருந்த அவர் 1953, அக்டோபர் 3 அன்று காலமானார். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரின் வாழ்க்கையும் பணியும் நீடித்த நீதி மற்றும் ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்புக்கு சான்றாகும். இந்தியாவின் அரசியல் சட்டக் கட்டமைப்பை வடிவமைப்பதில் அவரது பங்கு நாட்டின் ஜனநாயக நிர்வாகத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது. அவர் மிகவும் ஆர்வத்துடன் ஆதரித்த லட்சியங்களை உயர்த்திப் பிடிக்க தலைமுறைகளை ஊக்கப்படுத்துகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075979
***
SMB/RS/DL
(Release ID: 2076133)
Visitor Counter : 13