தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பண்டித ஜவஹர்லால் நேரு: இந்திய அரசியல் சாசனத்தின் வழிகாட்டி

Posted On: 22 NOV 2024 5:19PM by PIB Chennai

அலகாபாத் ஆனந்த பவனத்தில் 1889-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி பிறந்தவரான ஜவஹர்லால் நேரு இந்தியாவின் நவீன அடையாளத்தை உருவாக்கிய மாபெரும் தலைவராவார். பிரபல வழக்கறிஞரான மோதிலால் நேரு மற்றும் ஸ்வரூப் ராணி தம்பதியரின் மகனான இவர், இந்திய கலாச்சார நன்மதிப்புகளுடன் புரட்சிகரமான சிந்தனைகளையும் கொண்டவராவார். 15-வது வயதில் இங்கிலாந்து சென்ற நேரு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டிரினிட்டி கல்லூரியில் ஹாரோ மற்றும் லண்டன் பொருளாதார பள்ளியில் பயின்றார். இங்கிலாந்தில் அவர் தங்கியிருந்த காலத்தில், அவரது அறிவாற்றல் மேம்பட்டதுடன், இந்திய அரசியல் இயக்கங்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

1912-ல் இந்தியா திரும்பிய நேரு, அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். எனினும் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் அவருக்கு இருந்த ஈடுபாடு, அவரது போக்கை மாற்றியது. மகாத்மா காந்தியின் தலைமையால் ஈர்க்கப்பட்ட அவர், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தார். ரௌலட் சட்டத்தை வெகுவாக எதிர்த்த அவர், உப்பு சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சிறைவாசம் அனுபவித்தார். இந்தியாவின் விடுதலைக்காக அவர் தம்மை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார்.  பிரசல்ஸ் காங்கிரஸ் (1927) மற்றும் மாஸ்கோ பயணங்கள், சோசலிசம் மற்றும் இந்தியாவின் தற்சார்பு குறித்த அவரது எண்ணங்களை உறுதிப்படுத்தின.

1929-ம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் நேருவின் அரசியல் ஆளுமை வெளிப்பட்டது. முழுமையான சுதந்திரம் தேவை என்ற அவரது வாதம் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. நாடு சுதந்திரமடைந்த பிறகு  நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்ற அவர், 1947, ஆகஸ்ட் 15 அன்று ஆற்றிய “Tryst with Destiny” என்ற தலைப்பிலான உரை அவரது தனித்துவத்தை எடுத்துரைத்தது. தேசத்தை கட்டியெழுப்புவதுடன், ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அறிவியல் முன்னேற்றம் போன்ற மாபெரும் பணிகளை அவர் திறம்பட செய்துமுடித்தார்.

வளர்ச்சிக்காக திட்டமிடுவதில் உறுதியான நம்பிக்கை கொண்ட நேரு, திட்டக் குழுவை ஏற்படுத்தியதோடு, வறுமை ஒழிப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மையை அகற்றுவதற்கான ஐந்தாண்டு திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். அவரது தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமைப் பண்பு, பல்வேறு நதிநீர் திட்டங்கள், சமுதாய மேம்பாட்டு திட்டங்களுக்கு வழிவகுத்ததுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டார். உலக அமைதி மற்றும் ஒத்துழைப்புக்காக, அணிசேரா இயக்கம் மற்றும் பஞ்ச சீல கொள்கைகளை செயல்படுத்துவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

 நேருவின் பங்களிப்புகள் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக அமைந்தது. Glimpses of world history  மற்றும்  தி டிஸ்கவரி ஆப் இந்தியா போன்ற அவரது நூல்கள் அவரது அறிவாற்றலின் வலிமையை வெளிப்படுத்தின. நேரு மாமா என அன்புடன் அழைக்கப்பட்ட அவர், குழந்தைகள் மீது அளப்பரிய அன்பு காட்டியதுடன், அவர்களது நலன் மற்றும் கல்விக்காகவும் பாடுபட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076035

***

MM/AG/DL


(Release ID: 2076107) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi