இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல்
2025 ஜனவரி 11 முதல் 12 வரை தேசிய இளைஞர் விழா நடைபெறும்
Posted On:
21 NOV 2024 1:26PM by PIB Chennai
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்லும் துடிப்பான தலைமுறையாக இன்றைய இந்திய இளைஞர்கள் நாட்டின் மிகப்பெரிய பலத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். இருப்பினும், இந்த லட்சிய இலக்குக்கான பாதையானது சவால்கள் இல்லாமல் இல்லை. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க இளைஞர்களின் அதிக ஈடுபாடு தேவை என்ற பிரதமரின் அழைப்புக்கு ஏற்ப, இளைஞர் நல அமைச்சகம் தேசிய இளைஞர் விழாவை வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடலாக மாற்றியுள்ளது. இந்த மாற்றத்துக்கான முன்முயற்சி, இந்திய இளைஞர்களின் கூட்டுத் திறனைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையான பங்களிப்பை வழங்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
விக்சித் பாரத் @ 2047 முன்முயற்சிஎன்பது 2047-ல், சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவில், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த மாற்றத்தின் முக்கிய உந்து சக்தியாக கருதப்படும் இந்திய இளைஞர்களின் தீவிர பங்கேற்பு அதன் இதயத்தில் உள்ளது. "இளைஞர் சக்தி மாற்றத்தின் முகவர் மற்றும் மாற்றத்தின் பயனாளிகள்" என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். இளைஞர்களின் விருப்பங்களை நாட்டின் வளர்ச்சி இலக்குகளுடன் சீரமைத்து, புதுமை, முன்னேற்றம், தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் எதிர்காலத்தை இது கட்டமைக்கிறது.
2024, நவம்பர் 18 அன்று, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தேசிய இளைஞர் விழா 2025-ஐ அறிவித்தார், இது இப்போது வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அதிக இளைஞர்களின் ஈடுபாட்டிற்கான பிரதமரின் பார்வையுடன் இணைந்து, இந்த முயற்சி வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அவர்களின் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தளத்தை வழங்குகிறது. இதன் மூலம் இளம் திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பதை
இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தேசிய நிகழ்வு 2025 ஜனவரி 11-12 தேதிகளில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும்.
இந்த உரையாடல் இரண்டு முக்கிய நோக்கங்களில் கவனம் செலுத்தும்: முதலாவதாக, அரசியலில் புதிய இளம் தலைவர்களைக் கொண்டு வருவது, மாண்புமிகு பிரதமர் தனது சுதந்திர தின உரையின் போது விடுத்த அழைப்புக்கு ஏற்ப, அரசியல் சாராத பின்னணி கொண்ட 1 லட்சம் இளைஞர்களை இந்தத் துறைகளில் ஈடுபடுத்துவது. தேசிய இளைஞர் விழா தலைமைத்துவ திறன் கொண்ட இளம் திறமைசாலிகளை அடையாளம் கண்டு வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த தங்கள் கருத்துக்களையும் தொலைநோக்கையும் பிரதமரிடம் நேரடியாகப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை வழங்குகிறது.
இரண்டாவதாக, வெளிப்படையான, ஜனநாயக ரீதியான, தகுதி அடிப்படையிலான தேர்வு முறையின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு இளைஞர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பை உறுதி செய்வது. இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல, அடுத்த தலைமுறைக்கு அதிகாரம் அளிப்பதில் அரசின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி எடுத்துக் காட்டுகிறது.
வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் – தேசிய இளைஞர் விழா 2025 மூன்று முக்கிய பிரிவுகளில் உள்ள இளம் தலைவர்களின் ஆற்றல்மிக்க குழுவை ஒன்றிணைக்கும். முதல் குழுவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வளர்ச்சியடைந்த இந்தியா சவாலின் பங்கேற்பாளர்கள் இருப்பார்கள். இரண்டாவது குழுவில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான இளைஞர் விழாக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் திறமைசாலிகள், ஓவியம், அறிவியல் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் அறிவிப்பு போட்டிகள் போன்ற பகுதிகளில் போட்டியிடுவார்கள். மூன்றாவது குழுவில் தொழில்முனைவு, விளையாட்டு, விவசாயம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சிறந்துவிளங்கும் இளைஞர்கள் இருப்பார்கள் மொத்தத்தில், 2025 தேசிய நிகழ்வில் பங்கேற்க இந்தக் குழுக்களிலிருந்து சுமார் 3,000 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடலின் ஒரு பகுதியாக, மறுவடிவமைக்கப்பட்ட தேசிய இளைஞர் விழாவில், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபட இளைஞர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு நான்கு சுற்று போட்டிகள் நடத்தப்படும்.
சுற்று 1: விநாடி வினா
15-29 வயதுடைய ஒருவர் வரும் நவம்பர் 25 முதல் டிசம்பர் 5 வரை மேரா யுவ பாரத் தளத்தில் நடத்தப்படும் டிஜிட்டல் விநாடி வினாப் போட்டியில் பங்கேற்கலாம் .பங்கேற்பாளர்களின் அறிவு மற்றும் இந்தியாவின் மைல்கல் சாதனைகள் குறித்த விழிப்புணர்வு இதில் சோதிக்கப்படும்.
சுற்று 2: கட்டுரை/வலைப்பதிவு எழுதுதல்
முந்தைய சுற்றில் வெற்றி பெற்றவர்கள், 'வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொழில்நுட்பம்', 'வளர்ச்சியடைந்த இந்தியாவுக்காக இளைஞர்களை மேம்படுத்துதல்' போன்ற 10 கருப்பொருள்களில் கட்டுரைகளை சமர்ப்பிப்பார்கள். இந்த போட்டி மை பாரத் தளத்திலும் நடத்தப்படும்.
சுற்று 3: மாநில அளவிலான விளக்கக்காட்சிகள்
2-வது சுற்றுக்கு தகுதி பெறும் பங்கேற்பாளர்கள் மாநில அளவில் தாங்கள் தேர்ந்தெடுத்த கருப்பொருள்கள் குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள். இந்த செயல் விளக்கக்காட்சிகள் மூலம், ஒவ்வொரு மாநிலமும் அடையாளம் காணப்பட்ட கருப்பொருள்களில் பல்வேறு குழுக்களை அமைத்து, போட்டிகளை நடத்தி, தேசிய அளவிலான சுற்றுக்குப் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சுற்று 4: பாரத் மண்டபத்தில் தேசிய சாம்பியன்ஷிப்
2025 ஜனவரி 11 முதல் 12 வரை நடைபெறும் தேசிய இளைஞர் விழாவில் பல்வேறு கருப்பொருள் அடிப்படையில் மாநில அளவிலான அணிகள் போட்டியிடும். வெற்றி பெறும் அணிகள் வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த தங்கள் பார்வையையும் யோசனைகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கும்.
விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் – தேசிய இளைஞர் விழா 2025-ல் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் இளைஞர்களை மையமாகக் கொண்ட முயற்சிகள் இடம்பெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075411
***
(Release ID: 2075411)
TS/SMB/AG/KR
(Release ID: 2075533)
Visitor Counter : 12