உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உடான்: உயரப் பறக்கும் சாமானிய மக்கள்

Posted On: 20 NOV 2024 2:01PM by PIB Chennai

உடான் திட்டம் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் அவ்வப்போது உச்சங்கள் தொடப்படுவதை அதிகரிக்கிறது.  2024 நவம்பர் 17 அன்று இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை 5,05,412 உள்நாட்டுப் பயணிகளை ஆகாயப் பயணத்தை மேற்கொள்ளச் செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளது.  ஒரே நாளில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் விமானத்தில் பயணம் செய்தது இதுவே முதல் முறையாகும்.  ஆகாயம் என்பது நம்பிக்கைக்கும் ஊக்கத்திற்கும் அடையாளமாக இருக்கிறது. ஒரு நாட்டில் குறைந்த செலவில் விமானப் பயணம் செய்யும் கனவு உடான் திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம் 2016 அக்டோபர் 21 அன்று நனவானது.

நாடு முழுவதும் 3,100 விமானங்கள் இயக்கப்படுவதன் மூலம் உலக அளவில் இந்தியாவின் விமானப் போக்குவரத்து  முக்கியத்துவம் பெற்றுள்ளது.  உடான் திட்டத்தின் மூலம் ஹெலிகாப்டர் சேவைகள் உட்பட 609 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன.  இது  நாடு  முழுவதும்   மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் தடையின்றி இணைக்கிறது.  உடான் திட்டம் என்பது பிரதமர் திரு நரேந்திர மோடியின், தொலைநோக்குப் பார்வையில் உருவானதாகும்.  தேசிய சிவில் விமானப் போக்குவரத்து கொள்கை குறித்த அறிவிப்பு  வெளியிடப்படுவதற்கு முன் நடைபெற்ற கூட்டத்தில் விமானப் பயணத்தை ஜனநாயகப்படுத்துவதன்  அவசியத்தை அவர் வலியுறுத்தி இருந்தார். கால்களில் ஸ்லிப்பர் அணிந்தவர்களும் பயணம் செய்வதை தாம் விரும்புவதாக  அவர் குறிப்பிட்டார். இந்த கனவுதான் உடான் திட்டம்  உருவாவதற்கு காரணமாக அமைந்தது.

2017 ஏப்ரல் 27 அன்று உடான் திட்டத்தின் முதலாவது விமானம் சிம்லாவின் அழகிய மலைப்பகுதியையும், தலைநகர் தில்லியையும் இணைக்கும் வகையில் வானில் பறந்தது. இந்த விமானம் இந்தியாவின் சாமானிய மக்களும் விமானங்களில் பயணம் செய்யும் மாற்றத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாக இருந்தது.  உடான் 1.0-ல் 128 விமான வழித்தடங்கள், 36 புதிய விமான நிலையங்களிலிருந்து இயக்கப்பட்டன. தற்போது உடான் 5.0-ல் பயண தூரத்தைக் கட்டுப்பாட்டை நீக்குதல், விமான நிலையங்களுக்கு முன்னுரிமை அளித்தல், ஹெலிகாப்டர் சேவையை அதிகரித்தல், சிறிய விமானப் போக்குவரத்தை ஏற்படுத்துதல், விடுபட்ட வழித்தடங்களை மீண்டும் இயக்குதல், தொலைதூரப் பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்தை உறுதி செய்தல், குறைந்த செலவில் விமானப் பயணம் போன்ற பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

உடான் திட்டம் வெற்றிகரமாக நடைபெற மத்திய – மாநில அரசுகளும் பல ஆதரவு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளன. மத்திய அரசு, முதல் 3 ஆண்டுகளுக்கு பிராந்திய இணைப்பு சேவைகள் வழங்கும் விமான நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் விமான எரிபொருளுக்கான கலால் வரியை 2 சதவீத அளவுக்கு குறைத்தது. மாநில அரசுகளும் விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூடுதல் வரியை, ஒரு சதவீதம் அளவிற்கு குறைக்க உறுதி பூண்டன அல்லது பிராந்திய தொடர்புக்கான விமான நிலையங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு, தீயணைப்புச் சேவை போன்றவற்றை குறைந்த செலவில் வழங்க ஒப்புக்கொண்டன.  தற்போது, உடான் சேவை மூலம் பல்வேறு விமான நிலையங்களில், விமானப் போக்குவரத்தும், பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. உதாரணமாக, தர்பங்கா விமான நிலையத்தில் 2023-24-ம் நிதியாண்டில், 5 லட்சம் பயணிகள் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.  இந்த விமான நிலையம் தில்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது.  இதே போல், ஜார்சு குடா விமான நிலையத்திற்கு 2023-24-ம் நிதியாண்டில் 2 லட்சம் பயணிகள்  வந்து சென்றுள்ளனர்.

உடான் திட்டத்தை  மேலும் ஊக்கப்படுத்த 2024 அக்டோபர் 20 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்தியப்பிரதேசத்தின் ரேவா, சத்தீஸ்கரின் அம்பிகாபூர், உத்தரப்பிரதேசத்தின் சஹரான்பூர் ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்களை திறந்து வைத்தார்.

உடான் என்பது வெறும் திட்டம் அல்ல.  ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரம் அளிப்பதில் விமானப்பயணத்தை பரிசாகக் கொண்ட ஒரு இயக்கமாகும். பிராந்திய இணைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் எண்ணற்ற குடிமக்களின்  விருப்பங்கள் நிறைவேற்றப்படுகின்றன.  அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியும், வேலை உருவாக்கவும் அதிகரிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செயதிக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074987

-------

TS/SMB/KPG/DL


(Release ID: 2075201) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi