சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
நாடு தழுவிய இரண்டு நாள் கடல்சார் பாதுகாப்பு பயிற்சி தொடக்கம்
Posted On:
20 NOV 2024 4:59PM by PIB Chennai
நாட்டின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த, இந்திய கடற்படை சார்பில் நாடு தழுவிய இரண்டு நாள் கடல் விழிப்புப் பயிற்சி இன்று தொடங்கியது. இதனை இந்திய கடற்படையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பிரிவு உள்ளூர் அளவில் ஒருங்கிணைக்கிறது. இது கடலோர பாதுகாப்பு பயிற்சியின் நான்காவது பதிப்பாகும். இது நாளை நவம்பர் 21 ஆம் தேதி முடிவடைகிறது.
இந்தியாவின் 11,098 கிமீ கடற்கரை முழுவதும் நடைபெறும் இப்பயிற்சியில், ஆறு மத்திய அமைச்சகங்கள், 21 மத்திய, மாநில அமைப்புகள் மற்றும் கடல்சார் பாதுகாப்புடன் தொடர்புடைய முகமைகள் ஈடுபட்டுள்ளன.
இப்பயிற்சிக்கான ஆயத்தப்பணிகள் 2024 அக்டோபர் முதல் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பெரிய அளவிலான பாதுகாப்புப் பயிற்சிக்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க அனைத்து முகமைகளுடனும் கூட்டுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சீ விஜில் 24 என்று பெயரிடப்பட்டுள்ள இப்பயிற்சி, துறைமுகங்கள், எண்ணெய்க் கசிவு போன்றவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவையாக கணிக்கப்பட்டுள்ள பகுதிகள், கடல்வழி தொலைத்தொடர்பு கேபிள் தரையிறங்கும் நிலையங்கள் உள்ளிட்ட இந்தியாவின் கடலோர சொத்துக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை ஆகியவையும் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது கடலோர மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் பரந்த கடற்கரை மற்றும் 24 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட நாட்டின் தனிப்பொருளாதார மண்டலம் ஆகியவற்றின் பாதுகாப்பில் இப்பயிற்சி கவனம் செலுத்துகிறது.
26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இந்தியக் கடற்படை கடல்சார் பாதுகாப்பிற்கான முன்னணி பொறுப்பு நிறுவனமாகப் பணிபுரிகிறது. கடலோரப் பாதுகாப்பிற்கான மத்திய, மாநில பாதுகாப்பு முகமைகளிடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்வதில் சீ விஜில் 24 பயிற்சி முக்கிய பங்களிப்பை ஏற்படுத்தும்.
சீ-விஜில் பயிற்சியில், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள், மீனவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி பகுதியில், இந்திய கடற்படை, தேசிய மாணவர் படையினர், சாரணர்கள் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடல்சார் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டங்களில் ஈடுபடுத்தியுள்ளது. கடற்படை 51 இடங்களில் கடலோர பாதுகாப்பு பற்றிய தயார்நிலை மதிப்பீடுகளையும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கடல்சார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியது. இப்பயிற்சியானது. தமிழ்நாடு காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுமம், மீன்வளத் துறை, வனத்துறை, சுங்கம், சிஐஎஸ்எஃப் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போன்ற அமைப்புகளிடமிருந்து சிறந்த ஒத்துழைப்பைப் பெற்றுள்ளது.
சீ விஜில் 24 என்பது நாட்டின் கடல்சார் பாதுகாப்புக்கான கட்டமைப்பை மேம்படுத்துவதையும், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு பற்றிய தயார்நிலையின் முழுமையான மதிப்பீட்டை உறுதி செய்வதையும் இலக்காகக் கொண்ட ஒரு முக்கியமான பயிற்சியாகும். இந்தியாவின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் இந்தியக் கடற்படையின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தப் பயிற்சி பிரதிபலிக்கிறது.
*****
(Release ID: 2075106)
Visitor Counter : 26