உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஒற்றுமை தினம்- ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் பாரம்பரியத்தைக் கொண்டாடுதல்

Posted On: 30 OCT 2024 2:28PM by PIB Chennai

ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 31 அன்று, இந்தியா தேசிய ஒற்றுமை தினத்தைக் கொண்டாடுகிறது. இது ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த குறிப்பிடத்தக்க நாள் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய நபரும், இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் என்பது நினைவு கூரத்தக்கது. அவரது சிறந்த தலைமையும் தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பும் "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று அன்புடன் அவரை இன்றும் நினைவுகூர வைக்கிறது.  பல்வேறு மாநிலங்களை ஒரே தேசமாக ஒன்றிணைப்பதற்கும் இந்திய மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்ப்பதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை தேசிய ஒற்றுமை தினம் நினைத்து பார்க்கிறது.

சர்தார் வல்லபாய் படேல் -தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்:

சர்தார் வல்லபாய் படேல் 1875 அக்டோபர் 31 அன்று குஜராத்தின் நாடியாத்தில் பிறந்தார். தொழில் ரீதியாக ஒரு வெற்றிகரமான வழக்கறிஞரான அவரது வாழ்க்கையில் மகாத்மா காந்தி அவரை தனது உதவியாளராக தேர்ந்தெடுத்தபோது ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. 1918-ல் கேடா சத்தியாகிரகத்தை வழிநடத்தினார்.

சுதந்திரத்தின் போது, இந்தியாவானது பிரிட்டிஷ் இந்தியா மற்றும் சுதேச மாநிலங்களை உள்ளடக்கியதாக இருந்தது. 17 பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள் இருந்தன. அத்துடன் 560 க்கும் அதிகமான பகுதிகளும், சமஸ்தானங்களும் இருந்தன.  சுதேச மாநிலங்களின் ஆட்சியாளர்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. சர்தார் வல்லபாய் படேல் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பை உறுதி செய்யவும், அவற்றை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கவும் நடவடிக்கை எடுத்தார். 1947 ஆகஸ்ட் 15 அன்று, சர்தார் வல்லபாய் படேல் முதல் துணைப் பிரதமராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றார். தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

தேசிய ஒற்றுமை தினத்தைக் கொண்டாடுதல்

தேசிய ஒற்றுமை தினம் சர்தார் வல்லபாய் படேல் உருவகப்படுத்திய மதிப்புகளை நினைவூட்டுகிறது. ஒற்றுமை, ஒருமைப்பாடு, உள்ளடக்கம் என்பதே அது. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட, எண்ணற்ற கலாச்சாரங்கள், மொழிகள், மதங்கள் கொண்ட ஒரு நாட்டில், ஒற்றுமை உணர்வை வளர்ப்பது தேசிய முன்னேற்றத்திற்கு அவசியம். சவால்களை சமாளிக்கவும், பன்முகத்தன்மையைக் கொண்டாடவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், ஒன்றிணைய வேண்டும் என்பதை இந்த நாள் ஊக்குவிக்கிறது. தேசிய ஒற்றுமை தினத்தின் கொண்டாட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.

10-வது தேசிய ஒற்றுமை தினத்தைக் குறிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா 2024 அக்டோபர் 29 அன்று புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த 'ஒற்றுமைக்கான ஓட்டத்தை' கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

10வது தேசிய ஒற்றுமை தினம்:

இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏக்தா நகரில் (கெவாடியா) ரூ. 280 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டங்கள் சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்துதல், போக்குவரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. அக்டோபர் 31 அன்று, தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார். சர்தார் வல்லபாய் படேலுக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

ஒற்றுமையின் சிலை:

2018 அக்டோபர் 31 அன்று, குஜராத்தின் கெவாடியாவில், சத்புரா, விந்தியாச்சல் மலைகளின் பின்னணியில், உலகின் மிக உயரமான சிலையான ஒற்றுமையின் சிலை திறக்கப்பட்டது. 182 மீட்டர் (சுமார் 600 அடி) உயரமுள்ள இந்த சிலை சுதந்திர இந்தியாவின் சிற்பியான சர்தார் வல்லபாய் படேலின் சிலையாகும்.

தேசிய ஒற்றுமை தினம் என்பது வெறும் ஒரு நாள் மட்டுமல்ல. இது ஒவ்வொரு குடிமகனும் ஒற்றுமை உணர்வை வளர்த்துக் கொள்ளும் நடவடிக்கைக்கான அழைப்பாகும். இந்த நாளைக் கொண்டாடும் வேளையில், ஒன்றுபட்ட, இணக்கமான சமுதாயத்தை உருவாக்க நம்மை நாமே அர்ப்பணித்துக் கொள்வோம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2069502

 

***

TS/PLM/AG/RR


(Release ID: 2069553) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Hindi