சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதிய இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் இளைஞர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் அழைப்பு
சென்னையில் நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவில் 150 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்
Posted On:
29 OCT 2024 3:44PM by PIB Chennai
புதிய இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் அழைப்புவிடுத்துள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் அரசுத் துறையில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் பிரதமர் நரேந்திர மோடி ரோஜ்கர் மேளா எனும் வேலைவாய்ப்ப்பு திருவிழாவை இன்று புதுதில்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். நாடு முழுவதும் 40 இடங்களில் நடைபெற்ற விழாக்களில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
இதன் ஒரு பகுதியாக சென்னை ஐசிஎஃப் அம்பேத்கர் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின் 6 துறைகளில் தேர்வு செய்யப்பட்ட 150 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் வழங்கினார். இதில் 91 பணியிடங்கள் அஞ்சல் துறையிலும், மற்றவை மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளிலும் உள்ளவை.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 12 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக பணியில் இணைந்துள்ளனர் என்றார்.
மூன்றாவது முறையாக பதிவியேற்ற முதல் 100 நாட்களில் ரூ. 15 லட்சம் கோடி செலவில் நாடுமுழுவதும் பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார். 4 கோடி குடும்பங்களுக்கு பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணை பிறப்பித்துள்ளதாகவும், விவசாயிகளின் நன்மைக்காக பல்வேறு விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
2047-ம் ஆண்டு இந்தியா தனது சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில் உலகின் வல்லரசாக உருவாக வேண்டுமென்ற நோக்கத்துடன் மத்திய அரசு நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை, விமானப்போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, தொழில் வழித்தடம் ஆகியவற்றில் பெரும் முதலீடுகளை செய்து வருவதாக அவர் கூறினார்.
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா தற்போது 5வது இடத்தில் இருப்பதாகக் கூறிய அமைச்சர் எல். முருகன், உலக நாடுகளுக்கு இந்தியா சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்து வருவதாகவும் இதற்குப் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையே முழு காரணம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ், ஐசிஎஃப் பொது மேலாளர் சுப்பா ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
***
AD/SMB/AG/KR
(Release ID: 2069196)
Visitor Counter : 64