தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டின் 11 நகரங்களில் 33 தனியார் பண்பலை அலைவரிசைகள் அமைக்க விண்ணப்ப நடைமுறைகள் தொடங்கியுள்ளன – மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தகவல்


திருவண்ணாமலை, தஞ்சாவூர், குன்னூர் உள்ளிட்ட நகரங்களில் புதிய பண்பலை அலைவரிசைகள் தொடங்கப்படவுள்ளது

Posted On: 23 OCT 2024 8:10PM by PIB Chennai

தமிழ்நாட்டில் இதுவரை தனியார் பண்பலை ஒலிபரப்பு இல்லாத 11 நகரங்களில் புதிதாக 33 பண்பலை அலைவரிசைகளைத் தொடங்க விண்ணப்பங்களை, தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வரவேற்பதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் 3-வது முறை ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது என தெரிவித்தார். இத்துடன் எளிதாக தொழில்புரிய தடையாக இருந்த சுமார் 1,500 பழைய சட்டங்களை நீக்கியுள்ளது எனவும், தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற புதிய கொள்கைகளையும் சட்டங்களையும் வகுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்றும் வகையில் அனைத்து துறைகளுக்கான வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்ல கடந்த 100 நாட்களில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எண்ணற்ற திட்டங்களை  அறிவித்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். இவை யாவும் 2047-ல் இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற அடித்தளம் அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிதாக தனியார் பண்பலை அலைவரிசை தொடங்குவதற்கான அனுமதியின் மூலம் நாட்டில் மொத்தம் 234 தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகளுக்கான ஏலம் அக்டோபர்  14-ம் தேதி தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதில் தமிழ்நாட்டில் 11 நகரங்களில், தலா 3 அலைவரிசைகளுக்கான ஏலமும் தொடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக பாரம்பரிய ஊடகங்களாக வானொலியும்,  தொலைக்காட்சியும் இன்றும் சிறப்பாக உள்ளன என்று கூறிய அவர், டிஜிட்டல் யுகத்தில் வானொலியை மீண்டும் பிரபலமாக்கியது நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியே என்றும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை முக்கிய பங்காற்றுவதாக அமைச்சர் கூறினார். திரைப்படத் துறையை பாதுகாக்கும் வண்ணம் அண்மையில் ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் திரைப்பட திருட்டு நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

திரைப்படங்களின் தயாரிப்புக்குப் பிந்தைய (போஸ்ட் ப்ரொடக்ஷன்) பணிகளில் சென்னை, கோவை, ஹைதராபாத், மும்பை, புனே போன்ற நகரங்கள் முன்னோடி மையங்களாக திகழ்வதாகவும், உலக அளவில் பல ஹாலிவுட் படங்களுக்கான கிராபிக்ஸ், அனிமேஷன் பணிகளும் இந்நகரங்களில் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் இதற்கான ஒரு தேசிய உயர் சிறப்பு திறன் மையத்தை மும்பையில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையும் அமைச்சர் திரு எல் முருகன் சுட்டிக் காட்டினார்

நிகழ்ச்சியில் பேசிய தகவல் ஒலிபரப்பு துறையின் இணை செயலாளர் திரு சஞ்சீவ் சங்கர், தமிழ்நாட்டில் குன்னூர், திண்டுக்கல், காரைக்குடி, கரூர், கன்னியாகுமரி, நெய்வேலி, புதுக்கோட்டை, ராஜபாளையம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, வாணியம்பாடி ஆகிய நகரங்களில் தலா மூன்று அலைவரிசைகளில் புதிய தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகளைத் தொடங்க ஏல நடைமுறை  தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 18-ம் தேதி எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஏலத்தில் வெற்றி பெற்றவர்களின் விவரம் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்றும் இணை செயலாளர் திரு சஞ்சீவ் சங்கர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களும் விண்ணப்ப படிவமும் இந்த இணையதள இணைப்பில் இடம் பெற்றுள்ளன https://mib.gov.in/broadcasting/fm-radio-phase-iii-0

          

     

***

AD/PLM/KPG/DL


(Release ID: 2067478) Visitor Counter : 62


Read this release in: English