சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ், பிரான்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நிலையான உயிரி உற்பத்திப் படிப்பை வழங்குகிறது
Posted On:
15 OCT 2024 1:58PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), பிரான்சில் உள்ள டூர்ஸ் பல்கலைக்கழகத்துடன் (University of Tours) இணைந்து ‘உயர்மதிப்புள்ள பைட்டோகெமிக்கல்களின் நிலையான உயிரி உற்பத்தி’ தொடர்பான படிப்பை வழங்குகிறது.
சர்வதேச பல்கலைக்கழகங்களுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கல்வி நெட்வொர்க்குகளின் உலகளாவிய முன்முயற்சி (Global Initiative of Academic Networks- GION) திட்டத்தின்படி இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.
உயர்செயல்திறன் கொண்ட உயிரி உற்பத்தியுடன் நிலையான வளர்ச்சிக்கான உயிரி தயாரிப்புகளை, மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்வதை ஊக்குவித்து எளிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ‘பயோஇ3 கொள்கையை’ இந்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தற்போது இப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
தாவர மற்றும் நுண்ணுயிரிகளுக்கான உயிரித் தொழிற்சாலைகளில் இருந்து, அதிக மதிப்புவாய்ந்த தாவரங்களால் ஆன இயற்கைப் பொருட்களைத் தயாரிக்கும் ‘நிலையான உயிரி உற்பத்தி’ தொடர்பாக பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் பல்வேறு வணிகப் பயன்பாடுகளுக்கான பைட்டோகெமிக்கல் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதனை நிறைவு செய்வதுடன் இயற்கையையும் பாதுகாக்க இந்த பாடநெறி உதவிகரமாக இருக்கும்.
ஐஐடி மெட்ராஸ்-க்கு வெளியே இருப்பவர்களுக்காக இப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள், தொழில் வல்லுநர்கள், தாவர உயிரித் தொழில்நுட்பம் / பயோ பிராசஸ் இன்ஜினியரிங்/ உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றின் (பிடெக், எம்டெக், பிஎச்டி) மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தாவர செல் மற்றும் நுண்ணுயிர் தொழில்நுட்பம், நொதித்தல் தொடர்பான அடிப்படை அம்சங்களை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.
30 இடங்களைக் கொண்ட இந்தப் படிப்பில் சேருவோர் நேரில் வந்து பங்கேற்க வேண்டியிருக்கும். 2024 நவம்பர் 22 வரை விண்ணப்பப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் பின்வரும் இணைப்பில் தரப்பட்டுள்ளன- https://shorturl.at/23b9H
உயிரி இயக்கவியல் வழித்தடங்கள் மற்றும் நவீன அணுகுமுறைகளை அடையாளம் காண்பதற்கான அடிப்படை ஆராய்ச்சியின் தேவையை இது நிவர்த்தி செய்யும். அத்துடன் தாவர உயிரித் தொழில்நுட்ப அணுகுமுறைகளில் விரைந்த செயல்பாட்டையும், புதிய வளர்ச்சிகளையும் எட்ட முடியும். மேலும் தாவர மற்றும் ஈஸ்ட் செல் உயிரி தொழிற்சாலைகளில் இருந்து அதிக மதிப்புள்ள பைட்டோகெமிக்கல்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யலாம்.
இயற்கைத் தாவரங்களில் இருந்து பிரித்தெடுத்தல், மொத்த இரசாயன தொகுப்பாக்குதல் ஆகியவற்றுக்கு மாற்றாக, தற்போதுள்ள அதிநவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக மதிப்புள்ள தாவர வளர்சிதை மாற்றங்கள் மூலம் (மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் போன்ற தாவர ரசாயனங்கள்) நிலையான உற்பத்திப் பொருட்களாக எவ்வாறு மாற்றுவது என்பதைப் பற்றி பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதே இப்பாடத்திட்டத்தின் நோக்கம். 'செல் தொழிற்சாலை' எனப்படும் பைட்டோ கெமிக்கல்களின் நிலையான உயிர் உற்பத்திக்காக, தாவர மற்றும் நுண்ணுயிர் செல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை இந்த நுட்பங்கள் அடிப்படையாகக் கொண்டவையாகும்.
இவ்வாறான படிப்புகளின் அவசியத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் உயிரித் தொழில்நுட்பத்துறையின் பூபத்-ஜோதி மேத்தா உயிரி அறிவியல் பள்ளி பேராசிரியை ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “இந்தியாவைப் பொறுத்தவரை உள்நாட்டிலும், உலகச் சந்தையிலும் தாவர அடிப்படையிலான இயற்கைப் பொருட்கள், தாவர வேதிப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த முக்கிய பிரிவில் உலகளாவிய உயிரி உற்பத்தி மையமாக மாற்ற வேண்டுமெனில் திறன் மேம்பாடு, புத்தாக்கம், தொழில்முனைவு ஆகிய மூன்று அம்சங்களை மையமாகக் கொண்டு பணியாற்றுவது அவசியம்” எனத் தெரிவித்தார்.
ஐஐடி மெட்ராஸ் பயோஇன்குபேட்டர் ஆசிரியப் பொறுப்பாளருமான பேராசிரியை ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா கூறும்போது, “வளர்ந்துவரும் ஆராய்ச்சியாளர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மத்தியில் இதுபோன்ற நிலையான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்த இதுபோன்ற குறுகியகாலப் படிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இத்தொழில்நுட்பங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பெரும் சமூக-பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை” என்றார்.
பிரான்சில் உள்ள டூர்ஸ் பல்கலைக்கழகத்தின் உயிரி மூலக்கூறுகள்- தாவர உயிரித் தொழில்நுட்ப ஆய்வகத்தின் இயக்குநர் பேராசிரியர் நதாலி கிக்லியோலி-குய்வார்க் கூறும்போது, “ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நாடுகள் குறிப்பிட்ட சில மருந்துகளின் உற்பத்தியைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை 2020-ம் ஆண்டில் கோவிட் தொற்றுநோய்க் காலம் நமக்கு எடுத்துரைத்தது. வயல்வெளியில் வளரும் தாவரங்களுக்கு மாற்றாகவும், நிலையான வளர்ச்சி அணுகுமுறையின் ஒரு பகுதியாகவும், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, வரும் ஆண்டுகளில் முக்கிய சவால்களில் ஒன்றாக மாறி வருகிறது” எனக் குறிப்பிட்டார்.
பேராசிரியர் நதாலி கிக்லியோலி-குய்வார்க் மேலும் கூறும்போது, “இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் திறன்கொண்ட வளர்ந்துவரும் உயிரித் தொழில்நுட்பங்களின் அடித்தளத்தையும் கருத்தையும் அமைப்பதை நோக்கமாகக் கொண்டு இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய திட்டங்களின் வளர்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பின் சக்தியை இதன் பங்கேற்பாளர்கள் நிரூபிப்பார்கள். அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அல்லது இதனைத் தொழிலாக மேற்கொள்வோர் மற்றும் தொழில்துறையினர் இதற்கான ஆராய்ச்சி மற்றும் வணிக வளர்ச்சியின் பாதையில் ஈடுபடும் வகையில் ஆர்வத்தை தூண்டக்கூடும்” எனத் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் விஞ்ஞானிகள், தொழில்முனைவோரின் திறமையைக் கண்டறியும் வகையிலும், இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுடனான அவர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்ட ‘கல்வி நெட்வொர்க்குகளின் உலகளாவிய முன்முயற்சி’த் (GIAN) திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் தற்போதுள்ள கல்வி வளங்களைப் பெருக்கி, தர சீர்திருத்தத்தின் வேகத்தை விரைவுபடுத்துவதால் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறனை உலகளாவிய தரத்திற்கு உயர்த்துதல் போன்றவைகளை மேற்கொள்ள முடியும்.
***
MM/KPG/KR
(Release ID: 2064952)
Visitor Counter : 54