சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டெலி மனஸ்: இந்தியாவின் மனநலப் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்துகிறது

Posted On: 13 OCT 2024 7:23PM by PIB Chennai

அக்டோபர் 10, 2022 அன்று இந்திய அரசால் தொடங்கப்பட்ட தேசிய தொலை மனநலத் திட்டம் (NTMHP), நாட்டின் மனநல சுகாதார அமைப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளின் இரண்டு ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, Tele MANAS (Tele Mental Health Assistance and Networking Across States) நாடு முழுவதும் கிடைக்கும் கட்டணமில்லா ஹெல்ப்லைனாக (14416) அறிமுகப்படுத்தப்பட்டது, இது பரந்த அளவிலான மனநல சேவைகளை வழங்குகிறது. இந்த டிஜிட்டல் தளத்தின் மூலம், தனிநபர்கள் தொலைபேசி அடிப்படையிலான ஆலோசனை, உளவியல் சிகிச்சை, மனநல ஆலோசனைகள் மற்றும் அவசர சிகிச்சை உள்ளிட்ட பரிந்துரை சேவைகளை தூரம் அல்லது செலவு போன்ற தடைகள் இல்லாமல் அணுகலாம்.

டெலி மனஸ் இந்தியா முழுவதும் லட்சக்  கணக்கானவர்களுக்கு மனநல சுகாதாரத்தை மிகவும் அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது.மக்கள், குறிப்பாக தொலைதூர பகுதிகளில் உள்ளவர்கள், சரியான நேரத்தில் ஆதரவைப் பெறுவதை உறுதி செய்கிறது. இவ்வளவு பரந்த அளவில் மனநல சேவைகளை வழங்குவதற்கான திட்டத்தின் திறன், உலகளாவிய சுகாதார அதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. உலக சுகாதார அமைப்பு டெலி மனஸை மனநல சுகாதார சேவை வழங்குவதற்கு ஒரு புதுமையான, பயனுள்ள மாதிரி என்று பாராட்டியது.

இந்தியாவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ரோடெரிகோ எச். ஓஃப்ரின், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டத்தின் வெற்றிக்காகப் பாடுபட்ட  சுகாதார அமைச்சகத்தைப் பாராட்டினார். டெலி மனஸ் பற்றிய உலக சுகாதார அமைப்பின் ஆய்வு  மனநல விளைவுகளை கணிசமாக மேம்படுத்துவதற்கான அதன் திறனை எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டார். இந்த முயற்சியின் மூலம் மனநலனுக்கு ஆதரவளிப்பதில் ஆரம்ப சுகாதார மையங்கள், குறிப்பாக ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களின் முக்கிய பங்கை அவர் சுட்டிக்காட்டினார். இது இந்தியாவின் பொது சுகாதார கட்டமைப்பின் ஒரு மைல்கல்லாக அமைகிறது.

டெலி மனஸ்  மூன்றாவது ஆண்டில் நுழையும் போது, மனநல சவால்களை எதிர்கொள்வதற்கு  வலுவான அர்ப்பணிப்பை அதன் சாதனைகள் பிரதிபலிக்கின்றன. நாட்டில் எங்கிருந்தாலும் அனைவருக்கும் கவனிப்பு கிடைப்பதை உறுதி செய்கிறது.

டெலி மனஸின் தேவை

உலக மக்கள்தொகையில் 18% பேர் வசிக்கும் இந்தியா, குறிப்பிடத்தக்க மனநல நெருக்கடியை எதிர்கொள்கிறது. மனநல கோளாறுகள், இயலாமையுடன்  வாழும் ஆண்டுகளின் இரண்டாவது முக்கிய காரணியாக உள்ளது. பல மாநிலங்களில் மரணத்திற்கு மூன்றாவது முக்கிய காரணியாக தற்கொலை  உள்ளது. இந்தியாவின் வயது வந்தோரில் 15% பேர் தலையீடு தேவைப்படும் மனநலப் பிரச்சினைகளை அனுபவிப்பதாக தேசிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சிகிச்சை இடைவெளி 70-92% வரை உள்ளது. இதனால் லட்சக் கணக்கானவர்கள் சிகிச்சையை அணுக முடியாமல் உள்ளனர்.

டெலி மனஸின் தொலைபேசி அடிப்படையிலான சேவை  24 மணி நேரமும்  இலவச மனநல ஆதரவை வழங்குகிறது, இது இந்தியா முழுவதும் உள்ள தனிநபர்கள் தங்களுக்குத் தேவையான உதவியை எளிதாகப்  பெறுவதை உறுதி செய்கிறது.

பயன்பாடு மற்றும் வீடியோ ஆலோசனைகள்

உலக மனநல தினமான அக்டோபர் 10 அன்று, டெலி மனஸ் மனநல ஆதரவுக்கான அணுகலை மேம்படுத்த அதன் மொபைல் செயலி மற்றும் வீடியோ ஆலோசனை சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன. டெலி மனஸ் செயலி  சுய பாதுகாப்பு உதவிக்குறிப்புகள், மன அழுத்த மேலாண்மை உத்திகள், ஆரம்பகால துயர சமிக்ஞைகளை அடையாளம் காண்பதற்கான கருவிகள் உள்ளிட்ட மனநல வளங்களை வழங்கும் ஒரு விரிவான தளமாக செயல்படுகிறது. இது  விளையாட்டுகள், நினைவாற்றல் நடைமுறைகள் போன்ற  செயல்பாடுகள் மூலம் பயனர்களை ஈடுபடுத்தி, பயனர் நட்பு அனுபவத்தை உறுதி செய்கிறது. இந்த செயலி இலவச, ரகசிய ஆலோசனையை 24 மணி நேரமும் வழங்குகிறது. பயனர்களை இந்தியா முழுவதும் உள்ள பயிற்சி பெற்ற மனநல நிபுணர்களுடன் இணைக்கிறது.

வீடியோ ஆலோசனைகள் தற்போதுள்ள ஆடியோ அழைப்பு சேவைகளுக்கு மற்றொரு அடுக்கைச் சேர்க்கின்றன. இது மனநல வல்லுநர்கள் அழைப்பாளரை நேரடியாகக் கவனிப்பதன் மூலம் இன்னும் முழுமையான மதிப்பீடுகளை செய்ய அனுமதிக்கிறது. இந்த அம்சம் பழைய நினைவுகளை மீட்டெடுப்பதற்கும், கவலைகளை தெளிவுபடுத்துவதற்கும் உதவுகிறது இந்த சேவை முதல் கட்டமாக கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் மற்றும் தமிழ்நாட்டில் கிடைக்கிறது, நாடு முழுவதும் விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது

முக்கிய சாதனைகள்

டெலி மனஸ் தொடங்கப்பட்டதிலிருந்து 14.7 லட்சத்துக்கும் அதிகமான  அழைப்புகளை திறம்பட கையாண்டதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது இந்தியா முழுவதும் மனநல ஆதரவை வழங்குவதில் அதன் முக்கிய பங்கை நிரூபிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2064548

*****

SMB/ KV

 

 

 



(Release ID: 2064557) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Hindi