பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
தொழில்முறை வளர்ச்சிக்கான சிறந்த பாதை: பிரதமரின் உள்ளகத் தொழில் பயிற்சித் திட்டம்
Posted On:
12 OCT 2024 7:19PM by PIB Chennai
"திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகியவை இந்தியாவில் இன்றியமையாத தேவைகள். இந்த திசையில் எங்கள் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது."
-பிரதமர் நரேந்திர மோடி
இன்றைய வேகமான பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான திறன்களுடன் இளைஞர்களை ஆயத்தப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா தீவிரமாக உணர்ந்து வருகிறது. இந்த பார்வைக்கு ஏற்ப, பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் எனப்படும் பிரதமரின் உள்ளகத் தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம் 2023 அக்டோபர் 03 அன்று தொடங்கப்பட்டது. இந்த லட்சிய முயற்சி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு மதிப்புமிக்க உள்ளகப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பல்வேறு வணிக சூழல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் பல்வேறு தொழில்களைத் தெரிந்து கொள்ளவும் அனுமதிக்கிறது.
2024-25-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. எண்ணெய், எரிவாயு, எரிசக்தி, விருந்தோம்பல், வாகனம், வங்கி, நிதி சேவைகள் உள்ளிட்ட 24 துறைகளில் உள்ளகப் பயிற்சி வாய்ப்புகள் உள்ளன . இந்த முன்னோடித் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அவர்களின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) செலவினங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தற்போது செயல்படுத்தப்படும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், பயிற்சிகளிலுருந்து தனித்து இருப்பதே இந்தத் திட்டத்தை வேறுபடுத்துகிறது. உள்ளகப்பயிற்சிகளில் (இன்டர்ன்ஷிப்) மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம், பிரதமரின் உள்ளகப் பயிற்சித் (இன்டர்ன்ஷிப்) திட்டம் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதும்.
இந்த முயற்சியின் மூலம், வேலை வாய்ப்புச் சந்தையில், திறமையான தொழிலாளர் சக்தியை வளர்ப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
தகுதி:
இத்திட்டம் 21 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்ட 12 மாத இன்டர்ன்ஷிப் பயிற்சியை வழங்குகிறது. குறிப்பாக முழுநேர வேலையில் இல்லாத அல்லது முழுநேர கல்வியில் ஈடுபடாத இந்திய இளைஞர்களுக்கு இது பயன் அளிக்கும். ஆன்லைன் அல்லது தொலைதூர கல்வி படிப்புகளில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 2024 அக்டோபர் 12 முதல் பிரதமரின் உள்ளகப் பயிற்சிக்கான தளம் மூலம் உள்ளகப் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் 2024-25-ம் நிதியாண்டில் 1.25 லட்சம் உள்ளகப் பயிற்சிகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிதி உதவி:
பயிற்சியாளர்கள் உள்ளகப் பயிற்சிக் காலம் முழுவதும் மாதந்தோறும் ரூ. 5,000 உதவித்தொகையைப் பெறுவார்கள் .
கூடுதலாக, இன்டர்ன்ஷிப்பில் சேர்ந்த பிறகு ரூ. 6,000, நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் ஒரு முறை மானியம் வழங்கப்படும்.
பிரதமரின் உள்ளகப் பயிற்சி இணையதளம்:
பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் மையப்படுத்தப்பட்ட இணையதளம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பன்முகத்தன்மை, சமூக உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதை வலியுறுத்தி, நிறுவனத்தின் தேவைகளுடன் வேட்பாளர்களின் விருப்பங்களையும் கருத்தில் கொள்ளும் ஒரு செயல்முறையை தளம் எளிதாக்குகிறது. இது எஸ்சி பிரிவினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
இன்டர்ன்ஷிப் எனப்படும் இந்த உள்ளகப் பயிற்சித் திட்டம் இளைஞர்களுக்கு நிதி ஆதரவையும் விரிவான பயிற்சி அனுபவத்தையும் வழங்குகிறது. இந்தியாவில் அடுத்த தலைமுறையினருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=153275&ModuleId=3®=3&lang=1
*****
PLM/ KV
(Release ID: 2064432)
Visitor Counter : 70