சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தலைமையில் மாநில நிதித்துறைச் செயலாளர்களின் முதல் மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
09 OCT 2024 11:56AM by PIB Chennai
இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தலைமையில் மாநில நிதிச் செயலாளர்களின் முதல் மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.
இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) மாநில நிதிச் செயலாளர்களின் முதல் மாநாட்டை புதுதில்லியில் அக்டோபர் 8, 2024 அன்று கூட்டியிருந்தார். மத்திய அரசின் செலவினச் செயலாளர், மாநிலங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் / முதன்மைச் செயலாளர்கள் / நிதித்துறைச் செயலாளர்கள், ரிசர்வ் வங்கியின் பிரதிநிதிகள், மத்திய அரசு மற்றும் நிதி அமைச்சகத்தின் கணக்கியல் சேவைகள், மாநிலங்களின் கணக்கியல் மற்றும் உரிமைப் பணிகளைக் கையாளும் மாநில கணக்காயர்கள், இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒரு பொதுவான இழையாக செயல்படும் மத்திய நிதித் துறையில் இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் முக்கியப் பங்கு வகிக்கிறார். சி.ஏ.ஜி. என்பவர் மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் அதன் நிறுவனங்களின் உச்ச பொதுத்துறை தணிக்கையாளர் மட்டுமல்லாமல், மாநிலங்களின் கணக்குகளைத் தொகுத்து அந்தந்தச் சட்டமன்றங்களில் அவற்றின் வருடாந்திரக் கணக்குகளை வழங்குவதற்கும் பணிபுரிகிறார். இந்த மாநாடு, பங்குதாரர்களுக்கு சி.ஏ.ஜி-யின் தொடர்புகளை நிறுவனமயமாக்க முயல்கிறது, மேலும் வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிதி அறிக்கையை வலுப்படுத்துதல் மற்றும் அதன் சீர்திருத்தங்கள் உட்பட பொது நிதி மேலாண்மை சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் தொடர்பை வலுப்படுத்துகிறது.
இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரான திரு. கிரிஷ் சந்திர முர்மு, தமது தொடக்க உரையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கான குறிக்கோள் தலைப்புகள் என்ற அளவில் செலவினங்களை ஒத்திசைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்த விஷயம் சில காலமாக பல பங்குதாரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மாநாட்டின் முக்கிய முடிவாக இருக்கும் என்ற தமது நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். மாநிலங்களில் மாதாந்திர கணக்குகளை இறுதி செய்யும் தேதியை அடுத்த மாதத்தின் 25-ஆம் தேதியிலிருந்து அதற்கடுத்த மாதத்தின் 10-ஆம் தேதிக்குள் முன்கூட்டியே வழங்க பங்குதாரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பொது நிதி மேலாண்மை கட்டமைப்பை வலுப்படுத்தவும், அதை வலுவானதாகவும், நிலையானதாகவும் மாற்ற பங்குதாரர்களுடன், குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் சி.ஏ.ஜி தொடர்ந்து பணியாற்றுவார். மத்திய நிதி மேலாண்மை அமைப்பு, மாநில நிதி மேலாண்மை அமைப்புகள், ரிசர்வ் வங்கியின் இ-குபர் போன்ற நிதி மேலாண்மை பயன்பாடுகளில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள், மாநிலங்களில் சி.ஏ.ஜி-யின் கணக்கியல் பயன்பாட்டுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டு வலுவான மற்றும் சரியான நேரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
துணை சி.ஏ.ஜி (அரசு கணக்குகள்) திரு ஜெயந்த் சின்ஹா, தமது வரவேற்புரையில், இந்த மாநாட்டை நிதியாண்டு நாட்காட்டியில் வருடாந்திர நிகழ்வாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். பொது நிதி மேலாண்மை குறித்த விரிவான பிரச்சினையில் மாநில அரசுகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டில் தொடர்புடைய பங்குதாரர்களுடன் ஈடுபடுவதற்கான வாய்ப்பை இது வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மாநில நிதிநிலை, நிதி அளவீடுகள், நிதித் தகவல் களஞ்சியம், மாநிலங்களுக்கிடையேயான முதன்மை செலவின அளவில் செலவின வகைப்பாட்டை ஒத்திசைத்தல், மாநிலங்களின் மாதாந்திர கணக்குகளை விரைந்து முடிக்க முன்னுரிமை அளித்தல் ஆகியவை குறித்து இந்த மாநாடு விவாதித்தது.
மாநாட்டில் நடந்த விவாதங்கள் மற்றும் எட்டப்பட்ட பொதுவான கண்ணோட்டம் ஆகியவை பொது நிதி மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்தவும், நிலைநிறுத்தவும் பெரிதும் உதவும்.

***
PKV/BR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2063389)
வருகையாளர் எண்ணிக்கை : 142