மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மேக் இன் இந்தியா திட்டத்தின் 10 ஆண்டுகள்


செல்பேசி ஏற்றுமதி 2014-15-ல் ரூ.1,566 கோடி என்பதிலிருந்து தற்போது ரூ.1,20,000 கோடியை எட்டியுள்ளது

மின்னணுத் துறை நாடு முழுவதும் சுமார் 1.2 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது: திரு எஸ் கிருஷ்ணன்

Posted On: 26 SEP 2024 5:32PM by PIB Chennai

'மேக் இன் இந்தியா' முன்முயற்சி மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கு சீராக பங்களிப்பு செய்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்துள்ளது. தொழில்நுட்பத்  திறன்களை மேம்படுத்தியுள்ளது. தற்சார்பு இந்தியா பார்வைக்கு  உதவியுள்ளது. மேக்-இன்-இந்தியா இயக்கத்தின் 10 வது ஆண்டு விழாவில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் திரு எஸ்.கிருஷ்ணன், இந்தியாவின் மின்னணுத் துறையில் மேக் இன் இந்தியா முன்முயற்சியின் மிகப்பெரிய தாக்கம் பற்றி எடுத்துரைத்தார். மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகளில் ஒன்றாக மின்னணுத்துறை உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

 மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் இந்தியாவின் ஏற்றுமதி, 2014-15 ஆம் ஆண்டில் 38,263 கோடி ரூபாய் என்பதிலிருந்து கணிசமாக உயர்ந்து தற்போது 2.41 லட்சம் கோடி ரூபாயாக அல்லது 29.1 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது மற்ற ஏற்றுமதி துறைகளின் வளர்ச்சியை விட கணிசமாக வேகமடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

2014-15 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்கப்பட்ட செல்பேசிகளில் 26% மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. மீதமுள்ளவை இறக்குமதி செய்யப்பட்டவை. இன்று இந்தியாவில் விற்பனையாகும் செல்பேசிகளில் 99.2% இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.

இந்தியாவில் ஆண்டுக்கு 325 முதல் 330 மில்லியன் செல்பேசிகளை உற்பத்தி செய்கிறோம். சுமார் ஒரு பில்லியன் செல்பேசிகள்  இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.

2023-24-ம் ஆண்டில் செல்பேசி ஏற்றுமதி சுமார் 1.2 லட்சம் கோடியாக இருந்தது. இது 2014-15-ல் இருந்ததை விட 77 மடங்கு அதிகமாகும். 2014-15-ம் ஆண்டில் செல்பேசி ஏற்றுமதி 1,566 கோடி ரூபாயாக இருந்தது, இது இப்போது சுமார் 1,20,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது என்ற விவரங்களை திரு கிருஷ்ணன் தெரிவித்தார்.

செல்பேசி துறைக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம் குறித்து பேசிய திரு கிருஷ்ணன், நாங்கள்  ஒட்டுமொத்த உற்பத்தி இலக்கை தாண்டிவிட்டோம் என்றார். உற்பத்தி மதிப்பு ரூ. 6 லட்சத்து 661 கோடியை எட்டியிருப்பதாகவும் முதலீட்டின் மொத்த மதிப்பு ரூ.9,100 கோடியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். திட்டத்தின் அசல் இலக்குபடி.மொத்த வேலைவாய்ப்பு 1,22,613 ஆக உள்ளது.எனவே இதுவும் மேக் இன் இந்தியாவின் வெற்றிக் கதைகளில் ஒன்றாகும். இன்று மின்னணுத் துறை நாடு முழுவதும் சுமார் 1.2 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவில் குறைகடத்தி உற்பத்தித் தளத்தை அமைப்பது என்பது மேக் இன் இந்தியா திட்டத்தின் மற்றொரு பெரிய பகுதியாகும் என்றும், இதை அடைய  இந்தியா அறுபது ஆண்டுகளுக்கு மேலாக  முயன்று வருகிறது என்றும் திரு கிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2059081   

***

SMB/AG/DL



(Release ID: 2059195) Visitor Counter : 27


Read this release in: Hindi , English