தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மோடி 3.0 இன் 100 நாட்கள்: விரைவான உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி
Posted On:
18 SEP 2024 4:18PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களில், நாட்டின் உள்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான உருமாற்ற முன்முயற்சிகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. உலகின் முதல் 10 துறைமுகங்களில் ஒன்றான மகாராஷ்டிர மாநிலம் வாதவனில் மாபெரும் துறைமுக கட்டுமானம் உட்பட ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சாலை இணைப்புகளை விரிவுபடுத்துதல், விமான நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் மெட்ரோ திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் இணைப்பு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான விரிவான உத்தியை பிரதிபலிக்கின்றன. அதே நேரத்தில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கான பெருநிறுவன வரி விகிதங்களைக் குறைத்தல், விண்வெளி புத்தொழில் நிறுவனங்களுக்காக ரூ.1,000 கோடி துணிகர மூலதன நிதியைத் தொடங்குதல் போன்ற பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தும் கொள்கைகள், புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் உலகளாவிய முதலீட்டை ஈர்ப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்புத் துறை தொடர்பாக குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், கட்டியெழுப்புவதிலும் மத்திய அரசு கணிசமான அளவில் முதலீடு செய்துள்ளது என்றும், இது பொருளாதாரத்தில் வலுவான பன்மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் நிதியமைச்சர் வலியுறுத்தினார். அடுத்த ஐந்தாண்டுகளில் உள்கட்டமைப்புக்கான வலுவான நிதி ஆதரவை அரசு பராமரிக்கும், அதே நேரத்தில் மற்ற முன்னுரிமைகள் மற்றும் நிதி ஒருங்கிணைப்பை சமநிலைப்படுத்தும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதமான மூலதன செலவினங்களுக்காக இந்த ஆண்டு ரூ.11,11,111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
துணிச்சலான முன்முயற்சிகள், நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கும் அரசின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. உள்கட்டமைப்பு முன்னேற்றங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான ஜெனிசிஸ் முன்முயற்சி மற்றும் உயிரி உற்பத்திக்கான பயோ இ3 கொள்கை போன்ற தொலைநோக்கு கொள்கைகளுடன் இணைந்து, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்துறையில் உலகளாவிய தலைமையாக இந்தியா உருவாக வழி வகுத்துள்ளது. எம்.எஸ்.எம்.இ போட்டித்தன்மையை ஊக்குவித்தல், கடன் உத்தரவாதங்கள் மூலம் சிறு வணிகங்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மையங்கள் மூலம் சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றுடன், இந்தியாவின் எதிர்காலம் ஒரு ஆற்றல்மிக்க மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையை உறுதியளிக்கிறது, இது உலக அரங்கில் ஒரு முக்கிய செயற்பாட்டாளராக நாட்டை நிலைநிறுத்துகிறது
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2056050
BR/KR
***
(Release ID: 2056508)
Visitor Counter : 36