இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தரம்பீரின் தங்க வேட்டை: கிளப் த்ரோவில் இந்தியாவின் வரலாற்று வெற்றி

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2024 3:19PM by PIB Chennai

அறிமுகம்:

இந்திய பாரா தடகளத்தின் வரலாற்று தருணமாக, தரம்பீர் 2024 பாராலிம்பிக்கில் ஆண்கள் கிளப் த்ரோ எஃப்51 இறுதிப் போட்டியில் 34.92 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஆசிய சாதனை படைத்தார். மூட்டு குறைபாடு, கால் நீள வேறுபாடு, பலவீனமான தசை சக்தி, பலவீனமான இயக்கம் கொண்ட விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய எஃப் 51 பிரிவில் தரம்பீர் போட்டியிட்டார். பாராலிம்பிக் விளையாட்டுகளில் கிளப் த்ரோ போட்டியில் இந்தியா பதக்கம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

பின்னடைவிலிருந்து வெற்றியை நோக்கி:

1989 ஜனவரி 18 அன்று ஹரியானாவின் சோனிபட்டில் பிறந்த தரம்பீர், வாழ்க்கையை மாற்றிய விபத்தில் சிக்கினார். அது அவரது பாதையை  மாற்றியது. தனது கிராமத்தில் உள்ள ஒரு கால்வாயில் டைவ் அடிக்கும்போது, தண்ணீரின் ஆழத்தை தவறாக கணித்து, கீழே உள்ள பாறைகளில் மோதினார். இது இடுப்புக்கு கீழே பக்கவாதத்திற்கு வழிவகுத்தது. வாழ்க்கையை மாற்றிய இந்த சம்பவம் புதிய வாய்ப்புகளைத் தேடுவதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை. 2014-ம் ஆண்டில், தரம்பீர் பாரா-விளையாட்டுகளில் ஈடுபடத் தொடங்கினார். இது அவரது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்தது. இதேபோன்ற நிலையை எதிர்கொண்ட சக பாரா தடகள வீரரான அமித் குமார் சரோஹாவின் வழிகாட்டுதலின் கீழ் கிளப் த்ரோவில் பயிற்சியைத் தொடங்கினார். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மூலம், தரம்பீர் விளையாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்தார். பயிற்சியைத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள் 2016 ரியோ பாராலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.

அப்போதிருந்து, தரம்பீர் நிலையான திறனை வெளிப்படுத்தி, சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக பல பதக்கங்களை வென்றுள்ளார்.

தரம்பீரின் வெற்றிகள்:

பாரா தடகளத்தில், 2018 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் தரம்பீர் முதன்முதலில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து 2022 போட்டியில் மற்றொரு வெள்ளிப் பதக்கம் வென்றார். தரம்பீர் 2024 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றார். இப்போது, பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் அவர் வரலாறு படைத்துள்ளார்.

அரசு ஆதரவு:

பல்வேறு திட்டங்கள் மூலம் தரம்பீரின் தடகள வாழ்க்கைக்கு மத்திய அரசு முக்கியமான ஆதரவை வழங்கியுள்ளது. சிறப்பு உபகரணங்களுக்கான நிதி உதவி அவரது செயல்திறனை மேம்படுத்தியுள்ளது. பயிற்சி மற்றும் போட்டி செலவுகளுக்காக கூடுதல் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இது சர்வதேச நிகழ்வுகளில் அவரது தயாரிப்பு மற்றும் பங்கேற்பை எளிதாக்கியது.

பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு:

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் கிளப் எறிதல் எஃப்51 போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று தந்த தரம்பீரிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.  இந்த சாதனையால் இந்தியா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

வாழ்க்கையை மாற்றிய விபத்திலிருந்து பாரிஸ் பாராலிம்பிக் 2024-ல் ஆண்கள் கிளப் த்ரோ எஃப்51 போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது வரையிலான தரம்பீரின் பயணம் விடாமுயற்சியின் சக்தியை எடுத்துக்காட்டுகிறது. அவரது பயணம் எண்ணற்றவர்களை தடைகளைத் தாண்டி செயல்பட ஊக்குவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைப் பார்க்கவும்: https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=152098&ModuleId=3

-------------------

PLM/RS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2052304) வருகையாளர் எண்ணிக்கை : 82
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी