சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் ஏலக்காயின் உற்பத்தித் திறனை அதிகரிக்க நறுமணப்பொருள் வாரியம் திட்டம்
Posted On:
04 SEP 2024 2:34PM by PIB Chennai
மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நறுமணப்பொருள் வாரியம், நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் ஏலக்காயின் உற்பத்தித் திறனை அதிகரிக்க விரிவாக்கத் திட்டம் ஒன்றை செயல்படுத்தவுள்ளது. இத்திட்டத்திற்காக 15வது நிதி ஆணையத்தின் கீழ் 2025-26-ம் நிதியாண்டிற்காக ரூ.422.30 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நறுமணப் பொருட்களில் மதிப்பூட்டம் செய்யப்பட்ட பொருட்களின் உற்பத்தி, பாதுகாப்பான பொருட்களை உற்பத்தி செய்தல், புவிசார் குறியீடுள்ள நறுமணப் பொருட்களின் அபிவிருத்தி, புதிய தொழில்முனைவோர்களுக்கு ஆதரவளித்தல் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் வேளாண் குழுக்கள், வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வடகிழக்கு மாநிலத்திலுள்ள ஏற்றுமதியாளர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு தருதல் போன்றவை இத்திட்டத்தில் அடங்கும்.
சிறிய மற்றும் பெரிய ஏலக்காயின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக மறு நடவுத் திட்டம், தரமான நடுபொருட்களை வழங்குவது, நீர்நிலைகள் அமைப்பது, காலநிலையின் அடிப்படையிலான காப்பீட்டுத்திட்டம், மற்றும் நிலையான உற்பத்திக்கான விரிவாக்க செயல்பாடுகள் இந்தப் புதிய திட்டத்தின் மூலமாக நடத்தப்படவுள்ளன.
நறுமணப் பொருட்களின் வர்த்தக மேம்பாட்டிற்காக சந்தை விரிவாக்கம், வர்த்தக அபிவிருத்தி, வர்த்தக ரீதியிலான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தல், தரப்பரிசோதனைக்கான ஆய்வகங்களை அமைத்தல் போன்ற வர்த்தக விரிவாக்க செயல்பாடுகளையும் இந்தத் திட்டம் நிறைவேற்றவுள்ளது.
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்போர் 2024 செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பித்துக் கொள்ள நறுமணப்பொருள்கள் வாரியத்தின் வலைதளமான www.indianspices.com அல்லது அருகிலுள்ள நறுமணப்பொருள் வாரியத்தின் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
***
PKV/RR/KR
(Release ID: 2051700)
Visitor Counter : 375