இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுமித் அன்டிலின் தங்கமான எறிதல்

Posted On: 03 SEP 2024 3:29PM by PIB Chennai

ஜூன் 7, 1998 அன்று ஹரியானாவின் சோனிபட்டில் பிறந்த சுமித் அன்டில், பாரா தடகள உலகில் உத்வேகத்தின் அடையாளமாக மாறியுள்ளார். பாரிஸ் 2024 பாராலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் F64 பிரிவில் போட்டியிட்ட சுமித், தங்கம் வென்றதன் மூலம் தனது இணையற்ற திறன்களையும் உறுதியையும் மீண்டும் வெளிப்படுத்தினார். இதனால், உலகின் முதன்மையான பாரா-தடகள வீரர்களில் ஒருவராக தனது நிலையை வலுப்படுத்தினார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் சவால்கள்

ஒரு பயிற்சி வகுப்பிலிருந்து வீட்டிற்குச் செல்லும் வழியில், ஒரு சோகமான விபத்துக்குப் பிறகு சுமித்தின் வாழ்க்கையில் கடுமையான திருப்பம் ஏற்பட்டது. சோனிபட்டைச் சேர்ந்த நம்பிக்கைக்குரிய மல்யுத்த வீரர் இந்த விபத்தில் தனது காலை இழந்தார். இது அவரது தடகள வாழ்க்கையை முடித்திருக்கக்கூடிய ஒரு பெரும் பாதிப்பு. இருப்பினும், சுமித்தின் அசைக்க முடியாத உறுதி, இந்த பின்னடைவிலிருந்து அவர் மீண்டு வர உதவியது. இந்திய விமானப்படையில் பணியாற்றிய தனது தந்தையின் ஆதரவுடன், சுமித் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவரது இடது கீழ் மூட்டில் ஒரு செயற்கை கால் பொருத்தப்பட்டது.

ஆரம்பத்தில், செயற்கை உறுப்பு கொண்ட வாழ்க்கைக்கு மாறுவது சவாலாக இருந்தது. இளம் தடகள வீரர் வலி மற்றும் இழப்பு உணர்வுடன் போராடினார். ஆனால், சுமித் தனது கிராமத்தைச் சேர்ந்த பாரா தடகள வீரரான ராஜ்குமாரை சந்தித்தபோது விதி குறுக்கிட்டது. ராஜ்குமார் அவரை பாரா விளையாட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தினார், சுமித்துக்குள் இருந்த உணர்வை மீண்டும் தூண்டினார். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அசைக்க முடியாத ஆதரவுடன், சுமித் தனது புதிய பாதையில் தன்னை அர்ப்பணித்தார், தினசரி பயிற்சி மற்றும் சுய முன்னேற்றத்திற்கு உறுதியளித்தார்.

ஈடு இணையற்ற சாதனை

தொடர்ச்சியான அசாதாரண வெற்றிகள், பாரா தடகளத்தில் சுமித் அன்டிலின் பயணத்தை அடையாளப்படுத்தியுள்ளன. டோக்கியோ 2020 பாராலிம்பிக் போட்டிகளில், அவர் ஈட்டி எறிதலில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இது அவர் மீது உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. சீனாவின் ஹாங்சோவில் நடந்த 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 73.29 மீட்டர் தூரம் எறிந்து தனது சொந்த உலக சாதனையை முறியடித்தார். அவரது ஆதிக்கம் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் வரை தொடர்ந்தது. அங்கு அவர் தங்கப் பதக்கங்களை வென்றார். இது அவரது காலத்தில் சிறந்த பாரா-விளையாட்டு வீரர்களில் ஒருவராக அவரது நற்பெயரை மேலும் உறுதிப்படுத்தியது.

அரசு ஆதரவு: வலிமையின் தூண்

உலக அரங்கில் சுமித் அன்டிலின் வெற்றிக்கு, மத்திய அரசின் ஆதரவு காரணமாக அமைந்தது. அவரது திறனை உணர்ந்து, ஒலிம்பிக் போடியம் இலக்கு திட்டம் (TOPS) போன்ற முயற்சிகள் மூலம், அரசு விரிவான உதவிகளை வழங்கியது. இந்த ஆதரவில், அவரது பயிற்சி மற்றும் போட்டித் தேவைகளுக்கான நிதி உதவி, சிறப்பு ஈட்டிகள் மற்றும் செயற்கை உறுப்புகள் வாங்குதல் மற்றும் நிபுணத்துவ பயிற்சி சேவைகள் ஆகியவை அடங்கும். கூடுதலாக, பிரான்ஸ், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மேற்கொண்ட நான்கு சர்வதேச வெளிப்பாடு பயணங்களிலிருந்து சுமித் பயனடைந்தார். அவை, அவரது திறன்களை வளர்ப்பதில் முக்கியமானவை. சோனிபட்டில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் (சாய்) தொடர்ச்சியான பயிற்சி வசதிகள், பாக்கெட் கொடுப்பனவுகளுடன், சுமித் மிக உயர்ந்த மட்டத்தில் சிறந்து விளங்க தேவையான வளங்களையும் சூழலையும் கொண்டிருப்பதை உறுதி செய்தது. பாராலிம்பிக் சாம்பியனாக மாறுவதற்கான அவரது பயணத்தில் அரசாங்கத்தின் அசைக்க முடியாத ஆதரவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

அங்கீகாரம் மற்றும் மரபு

2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்ததைத் தொடர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடியிடமிருந்து மனமார்ந்த வாழ்த்துச் செய்தி உட்பட, அனைத்து தரப்பினரிடமிருந்தும் சுமித் அன்டில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். சுமித்தின் "வெல்ல முடியாத உணர்வு மற்றும் திறமை" என்று பாராட்டிய பிரதமர், பாராலிம்பிக் சாம்பியன் என்ற பெருமையை எடுத்துரைத்தார்.

சுமித்தின் கதை வலிமை, உறுதிப்பாடு மற்றும் அசைக்க முடியாத மனித உணர்வு ஆகியவற்றில் ஒன்றாகும். வாழ்க்கையை மாற்றும் விபத்திலிருந்து பாராலிம்பிக் சாம்பியனாக மாறுவதற்கான அவரது பயணம், இந்தியாவிலும் உலகெங்கிலும் எண்ணற்ற நபர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. பாரா-தடகளத்தில் சாத்தியமான எல்லைகளை அவர் தொடர்ந்து தகர்த்தெறிவதால், சுமித் அன்டிலின் செயல்பாடு சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்கால தலைமுறை விளையாட்டு வீரர்களை பெரிய கனவு காணவும், அவர்களின் பாதையில் உள்ள எந்தவொரு தடையையும் சமாளிக்கவும் ஊக்குவிக்கும்.

***

MM/AG/KR/DL


(Release ID: 2051414)
Read this release in: English , Urdu , Hindi , Gujarati