சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பான பல்துறை விழிப்புணர்வு கண்காட்சியை கோவை மக்களவை உறுப்பினர் தொடங்கி வைத்தார்

Posted On: 27 AUG 2024 4:54PM by PIB Chennai

இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், கோவை மாநகரில் மத்திய அரசின் 'மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள்' குறித்த  ஐந்து நாள் விழிப்புணர்வு கண்காட்சியை கோவை அவினாசி சாலை, வஉசி பூங்கா அருகில் உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் கோவை மக்களவை உறுப்பினர் டாக்டர் கணபதி ராஜ்குமார் இன்று தொடங்கி வைத்து அரங்குகளைப் பார்வையிட்டார்.

ஆகஸ்ட்-31 வரை 5 நாட்களுக்கு நடைபெறும் இந்த விழிப்புணர்வு கண்காட்சியில், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த  புகைப்படக் கண்காட்சி, ஆதார் திருத்தம், விழிப்புணர்வு திரைப்படங்கள், கருத்தரங்கு, பல்துறை சார்ந்த அரங்குகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறுகின்றன.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய, கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளன. அதனை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல இது போன்ற நிகழ்ச்சிகள் பயனுள்ளதாக அமையும் என்றார். மேலும் குறிப்பாக பெண்கள் நலன் சார்ந்தும் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அதனை மகளிர் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, மத்திய அரசு திட்டங்கள் குறித்த கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குர் எம். அண்ணாதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கோவையில் நடைபெறும் இந்த கண்காட்சியில் பொதுமக்கள் பெருமளவு கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு இளைஞர்களின் கல்வி சார்ந்த வழிகாட்டுதல்களும் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான வழிகாட்டுதல்களும் துறை நிபுணர்களால் வழங்கப்படுகின்றன. எனவே இளைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல அலுவலகத்தின் இயக்குர் லீலா மீனாட்சி, மக்கள் நலன் சார்ந்த, மக்கள் வளர்ச்சிக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் எனவும், இளைஞர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களை பெற்றோர்களிடமும் மற்றவர்களிடமும் பகிர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியின் பல்வேறு மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி,  இந்திய தர நிர்ணய அமைவனம், பிரதமரின் மக்கள் மருந்தகம், தபால் துறை, சங்கரா கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மக்கள் தொடர்பக அலுவலகத்தின் கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், கற்பகம் கல்லூரி, அபிராமி நர்சிங் கல்லூரி மற்றும் ரத்தினம் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

 

 

 

***

AD/LKS/AG/KR



(Release ID: 2049129) Visitor Counter : 24