சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

“மருத்துவ ஜவுளிகளுக்கான இந்திய தரநிலைகள்” குறித்த கலந்துரையாடல் – பிஐஎஸ் சார்பில் சென்னையில் நடைபெற்றது

Posted On: 23 AUG 2024 3:39PM by PIB Chennai

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) சென்னை கிளை அலுவலகம் சார்பில் “மருத்துவ ஜவுளிகளுக்கான இந்திய தரநிலைகள்” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

சானிட்டரி நாப்கின்கள், டிஸ்போசபிள் பேபி டயப்பர், மீண்டும் பயன்படுத்தக்கூடிய சானிடரி பேட்/ சானிடரி நாப்கின்/ பீரியட் பேண்டீஸ், டென்டல் பைப்/நாப்கின்கள், பெட்ஷீட், தலையணை உறை மற்றும் காலணி உறைகள்  குறித்த தரநிலைகள் தொடர்பாக இதில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்திய தரநிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் ஜி.பவானி நிகழ்ச்சியில் பேசுகையில், மருத்துவ ஜவுளி (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2023க்கு இணங்குவது கட்டாயம் என்பதை உற்பத்தியாளர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் மருத்துவ ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் உரிய இந்திய தரநிலைகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பிஐஎஸ்-ன் தெற்கு மண்டல ஆய்வக விஞ்ஞானி திருமதி.மீனாட்சி கணேசன் பேசுகையில்,  மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஜவுளி வகைகள், அறுவை சிகிச்சை உடைகள், பேண்டேஜ்கள், உள்வைப்பு துணி வகைகள் உள்ளிட்ட தயாரிப்புகளை உள்ளடக்கியது என்றார். கூடுதலாக, சானிட்டரி நாப்கின்கள், குழந்தைகளுக்கான டயப்பர்கள், காலணி உறைகள், மருத்துவமனை படுக்கை துணிகள், தலையணை உறைகள் போன்ற தயாரிப்புகளும் இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார். உயர்தர மருத்துவ ஜவுளிகள்,  நோயாளிகளின் பராமரிப்புக்கும், சுகாதார சூழல்களில் ஒட்டுமொத்த சுகாதார மேலாண்மைக்கும் அவசியமான ஒன்றாகும் என்று அவர் விளக்கினார்

நிகழ்ச்சியில் சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் ஜி.திருவேங்கட செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விஞ்ஞானிகள் திரு டி. ஜீவானந்தம், திரு. தர்மபீர் ஆகியோர் தரநிலைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

பிஐஎஸ்-ன் தென்மண்டல ஆய்வகத்தைச் சேர்ந்த திரு பி.என். முரளி, திருமதி அருள் சத்யா ஆகியோர் மருத்துவ ஜவுளி தயாரிப்புகளில் பல்வேறு சோதனை முறைகளை விளக்கினர்.

நிகழ்ச்சியில் சுமார் 100  பேர் கலந்து கொண்டனர்.

 

 

***

PLM/RR/KR


(Release ID: 2048127) Visitor Counter : 76


Read this release in: English