சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி - டி3 செலுத்து வாகனம், இஓஎஸ் -08 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

Posted On: 16 AUG 2024 3:18PM by PIB Chennai

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மற்றுமொரு மைல்கல் வெற்றியாக இன்று, எஸ்எஸ்எல்வி டி3 செலுத்து வாகனம், இஓஎஸ்-08 செயற்கைக்கோளை வெற்றிகரமாக  475 கிலோமீட்டர் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.

ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவு தளத்திலிருந்து இன்று காலை 09:17 மணிக்கு எஸ்எஸ்எல்வி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

எடை குறைவான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்த வகை செலுத்து வாகனம் பயன்படும். புவி கண்காணிப்பு பணிக்காக 'இஓஎஸ் - 08' செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இன்று செலுத்தப்பட்ட அதன் எடை 175 கிலோவாகும். இதில், 'எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் - ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர்' ஆகிய ஆய்வுக் கருவிகள் உள்ளன. செயற்கைக்கோளில் இடம்பெற்றுள்ள ஜி.என்.எஸ்.எஸ்.ஆர் கருவி, கடல் மேற்பரப்பு காற்றின் திசை மாறுபாடு, மண்ணில் ஈரப்பதத்தின் மதிப்பீடு, நீர்நிலைகளைக் கண்டறிதல் போன்றவற்றுக்கு உதவும்.

இந்த செயற்கைக்கோள் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு பணிகளை துல்லியமாக மேற்கொள்ள உதவும். இரவிலும் பூமியை மிகத் துல்லியாக படம் பிடிக்கும் திறனுடையது. மேலும் இது ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்வோரை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட உள்ளது.

இஓஎஸ்-08 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், இந்த எஸ்எஸ்எல்வி செலுத்துவாகனம் வரிசையில் மூன்றாவது என்றும் அதன் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன என்றும் கூறியதுடன் திட்டக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இது 500 கிலோ வரையிலான சிறிய மற்றும் நானோ செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ பயன்படுத்தப்படும் என்று கூறிய அவர், விரைவில் இந்தத் தொழில்நுட்பம் நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றார். இது முற்றிலும் வணிக நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் புதிதாக கட்டப்படும் ஏவுதளம் இந்தவகை ராக்கெட்டுகளை தெற்கு திசை நோக்கி செலுத்துவதற்கு மிகவும் உதவும் என்று கூறிய அவர், அதன் அனைத்துக் கட்டுமானங்களும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

முன்னதாக செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தும் நிகழ்வை தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் நேரில் கண்டுகளித்தனர்.

  

  

***
AD/SMB/RR



(Release ID: 2045927) Visitor Counter : 25