சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தேசப் பிரிவினைக் கொடூரங்களின் நினைவு தின புகைப்படக் கண்காட்சி: தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர். என். ரவி தொடங்கி வைத்தார்

Posted On: 14 AUG 2024 2:28PM by PIB Chennai

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின், மத்திய மக்கள் தொடர்பகம் ஏற்பாடு செய்திருந்த தேசப் பிரிவினைக் கொடூரங்களின் நினைவு தின புகைப்படக் கண்காட்சியை தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர். என். ரவி இன்று (14.08.2024) தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், தேசப் பிரிவினைக் கொடூரங்களை விளக்கும் காணொளியையும் ஆளுநர் வெளியிட்டார்.

  

இந்தக் கண்காட்சியில், தேசப் பிரிவினைக் கொடூரங்களை ஆவணப்படுத்தும் வரலாற்றுப் புகைப்படங்கள், நாளிதழ் செய்திகள், தேசப் பிரிவினை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மக்களின் இடப்பெயர்வால் அவர்கள் சந்தித்த சொல்லிலடங்கா துயரங்கள்,   உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தேசப் பிரிவினையின் போது பிரிட்டிஷ் அரசு தீர்வை ஏற்படுத்தும் நடுவராக அல்லாமல் ஒரு மத்தியஸ்தராகவே செயல்பட்டதைக் கூறும் செய்தி, வைஸ்ராய் மௌண்ட்பேட்டன் 1947-ம் ஆண்டு ஜூன் 04-ஆம் தேதி அன்று புதுதில்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றியது, வன்முறை மற்றும் சூறையாடலால் பல இடங்கள் இரண்டாம் உலகப் போரின் பேரழிவிற்கு ஒப்பாக பாதிக்கப்பட்ட காட்சிகள் என பத்திரிகைகள் வெளியிட்டிருந்த செய்திகளும், புகைப்படங்களும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ரயில்களிலும், கப்பல்களிலும் ஏறுவதற்காக போராடிய மக்கள் வெள்ளத்தின் புகைப்படங்கள், ரயில்களில் இடம் கிடைக்காமல் ரயில் பாதைகளில் மக்கள் கால்நடையாக, குழந்தைகளை தோள்களில் சுமந்து செல்லும் பெற்றோர்வயதான பெற்றோரை தொட்டில் கட்டி சுமந்து சென்ற பிள்ளைகளின் புகைப்படங்கள் என பிரிவினைத் துயரங்களை காட்சிப்படுத்தும் பல வகையான புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இக்கண்காட்சியில் இடம்பெற்ற புகைப்படங்கள் அனைத்தும், அந்தக் கொடுந்துயரை இன்றும் நம் கண் முன்னே நிறுத்தும் வகையில் அமைந்திருந்தது.

 தேசப் பிரிவினைக்கான எல்லைகளை வகுப்பதற்கு நியமிக்கப்பட்ட சர் ராட்க்ளிஃப், அதற்கு முன்பு இந்தியாவுக்கு வந்ததேயில்லை என்ற தகவலும், பிரிவினை தொடர்பான சிக்கல்களை அவர் புரிந்து கொள்ளவில்லை என்ற தகவல்கள் அடங்கிய செய்திகளும் புகைப்படங்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷமாக இந்த புகைப்படக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

நிகழ்ச்சியில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர் திரு கிர்லோஷ் குமார், பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம். அண்ணாதுரை, மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குநர் திருமதி லீலா மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆளுநர் மாளிகையில், இன்று ஒரு நாள் மட்டும் நடைபெற்ற இந்தக் கண்காட்சியைப் பார்வையிட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

   

 

  

 

  

***

AD/PKV/KV

 



(Release ID: 2045188) Visitor Counter : 18