சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை முகவர் தேர்வு: 19.08.2024 அன்று சென்னையில் நேர் காணல்

Posted On: 12 AUG 2024 1:29PM by PIB Chennai

சென்னை வடக்குக் கோட்ட, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் தகுதியை பெற்றிருப்பின் தலைமை அஞ்சலகம் (பூங்கா நகர் தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை மத்திய ரயில் நிலையம் அருகே) சென்னை 600 003 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில்  19.08.2024 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

தேவையான தகுதிகள்:

கல்வித் தகுதி :  குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 - வயதிலிருந்து.

பிரிவுகள் : சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்  விண்ணப்பிக்கலாம்.

விரும்பத்தக்க தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவர்கள்.

இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் - வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அணுகவும். நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்காணல்  அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.                                      

***

SMB/AG/KV



(Release ID: 2044447) Visitor Counter : 211


Read this release in: English