சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சென்னை ஐஐடி ஐடிபிஐ வங்கியுடன் இணைந்து சைபர் பாதுகாப்பு ஆய்வகத்தைத் தொடங்கியுள்ளது

Posted On: 31 JUL 2024 3:39PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), ஐடிபிஐ வங்கியுடன் இணைந்து சுகாதாரம், நிதித் தொழில்நுட்பம், விண்வெளி போன்ற முக்கிய துறைகளில் பாதுகாப்புத் தீர்வுகளை உருவாக்கவும் பயன்படுத்தவும் சைபர் பாதுகாப்பு ஆய்வகத்தை உருவாக்கியுள்ளது.

இணையப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சந்தைக்குத் தயாரான ஐபி-க்களை உருவாக்குவதிலும், குறிப்பாக மொபைல் தொழில்நுட்பங்கள் தொடர்பாக உற்பத்தி மற்றும் வணிகமயமாக்கலிலும் இந்த ஆய்வகம் கவனம் செலுத்தும்.

ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் இன்று (31 ஜூலை 2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐடிபிஐ-ஐஐடிஎம் செக்யூர் சிஸ்டம்ஸ் லேப் (I2SSL) ஆய்வகத்தை ஐடிபிஐ வங்கியின் தலைமைச் செயல் அலுவலரும் மேலாண் இயக்குநருமான திரு. ராகேஷ் சர்மா தொடங்கி வைத்தார்.

ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐடிபிஐ வங்கியின் தலைமைப் பொது மேலாளர் திரு.சௌமியா சவுத்ரி, ஐடிபிஐ தலைமைப் பொதுமேலாளரும் பிராந்தியத் தலைமை அதிகாரியுமான திரு. மஞ்சுநாத் பை, ஐஐடி மெட்ராஸ் டீன் பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நூலா, ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஐடிபிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு.ராகேஷ் சர்மா கூறுகையில், “சைபர் பாதுகாப்பு ஆய்வகத்தை அமைப்பதற்காக ஐஐடிஎம்-உடன் கூட்டுச் சேர்ந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. இணைய அச்சுறுத்தல்களை முன்கூட்டியே எதிர்த்துப் போராடுவதற்கும், தரவு மற்றும் தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஐடிபிஐ வங்கியின் உறுதிப்பாட்டிற்கு இந்த முன்முயற்சி சான்றாக அமைந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், அனைத்துத் தரப்பினருக்கும் பாதுகாப்புடன் கூடிய சூழலை உருவாக்க முயல்கிறோம். சாத்தியமான அச்சுறுத்தல்களை எதிர்நோக்குதல், அடையாளம் காணுதல், நடுநிலையாக்குதல் என திறனை மேம்படுத்தும் வகையில் அனைவரும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்எனக் குறிப்பிட்டார்.

தொடக்க நிகழ்வில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, “நமது நாட்டின் பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்கும் முக்கிய தகவல் உள்கட்டமைப்பான நிதித்துறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இணையப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது. இதுபோன்ற அமைப்புகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தொடர்ச்சியாக கவனித்து செயல்திறன்மிக்க பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐடிபிஐ இடையேயான இந்த கூட்டு முயற்சி மிகச் சரியான நேரத்தில் உருவாகியுள்ளது. பாதுகாப்பு சவால்களுக்கு விரிவாக தீர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென விரும்புகிறோம்எனக் குறிப்பிட்டார்.

 

 

***



(Release ID: 2039601) Visitor Counter : 38


Read this release in: English