சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழக ரயில் திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு

Posted On: 24 JUL 2024 6:11PM by PIB Chennai

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில்  இந்த ஆண்டு 6,362 கோடி  ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2009 முதல் 2014 வரையிலான ஐந்தாண்டுகளில் ஒதுக்கப்பட்ட 879 கோடி ரூபாயைவிட 7 மடங்கு அதிகமென ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.   

புதுதில்லியில்  இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2014 முதல் 2024 வரையிலான பத்து ஆண்டுகளில்  தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழ்நாட்டில், 1,302 கிமீ தொலைவுக்கு புதிய ரயில்  தண்டவாளங்கள்  அமைக்கப்பட்டிருப்பதுடன்  2,152 கிமீ தொலைவுக்கான  ரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ளது என்றார்.  687 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  தற்போது ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் 2,587 கிமீ  தொலைவுக்கு  புதிய பாதை அமைப்பதற்கான 22 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சென்னை எழும்பூர், சென்னை கடற்கரை, எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், சென்னை பூங்கா, அம்பத்தூர், ஆவடி, பெரம்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம், குரோம்பேட்டை, அரக்கோணம், அரியலூர், கோவை சந்திப்பு, கோயம்புத்தூர் வடக்கு, மதுரை, ஜோலார்பேட்டை, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்செந்தூர்,  திருப்பூர். திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள 77 ரயில் நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட உள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

இதே போன்று தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கேரள மாநில ரயில்வே திட்டங்களுக்கு இந்த ஆண்டு 3,011 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  அம்மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 13 கிமீ தொலைவுக்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன் 49 கிமீ தொலைவுள்ள ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதன் மூலம் கேரளாவில் உள்ள ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில், 2014 முதல் 106 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், குருவாயூர், திருச்சூர், புனலூர், சாலக்குடி, கோழிக்கோடு, ஆலப்புழா உள்ளிட்ட 35 ரயில் நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்படும் எனவும் ரயில்வே  அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

*** 

AD/MM/KPG/DL

 


(Release ID: 2036472) Visitor Counter : 186


Read this release in: English