சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஐஐடி மெட்ராஸ், உலகிலேயே முதன்முறையாக டிஜிட்டல் கடல்சார் மற்றும் விநியோகச் சங்கிலி பாடத்தில் எம்பிஏ படிப்பைத் தொடங்கியுள்ளது

Posted On: 28 JUN 2024 2:38PM by PIB Chennai

ஐஐடி மெட்ராஸ் உலகிலேயே முதன்முறையாக டிஜிட்டல் கடல்சார் மற்றும் விநியோகச் சங்கிலி பாடத்தில் எம்பிஏ படிப்பைத் தொடங்கியுள்ளது. உலகளவில் பணிபுரியும் தொழில் வல்லுநர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கல்வி நிறுவன வளாகத்தில் தொழில் வல்லுநர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் இதன் தொடக்க நிகழ்வு இன்று (28 ஜூன் 2024) நடைபெற்றது.

ஐஐடி மெட்ராஸின் மேலாண்மைக் கல்வி, கடல்சார் பொறியியல் துறைகளும், தொழில் பங்குதாரரான ஐ-மாரிடைம் கன்சல்டன்சியும் இணைந்து இந்த 24-மாதகால பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளன. கடல்சார் வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மையில் வேகமாக வளர்ந்துவரும் டிஜிட்டல் அம்சங்களைப் புகுத்தும் வகையில் உலகளாவிய நிபுணர்களை ஈடுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.

குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டத்துடன், குறைந்தது இரண்டாண்டு முழுநேர பணி அனுபவம் பெற்றவர்கள் இதில் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். மாணவர்களைச் சேர்க்கும் நடைமுறையைப் பொறுத்தவரை, ஐஐடி மெட்ராஸ் மாணவர் சேர்க்கைத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடைபெறும். செப்டம்பர் 2024-ல் தொடங்கவுள்ள இப்பாடத்திட்டத்தின் முதல் தொகுதிக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

எம்பிஏ (டிஜிட்டல் கடல்சார் மற்றும் விநியோகச் சங்கிலி) பாடத்திட்டத்தின் தனித்துவ அம்சங்களை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “நவீன கடல்சார் மற்றும் விநியோகச் சங்கிலித் தொழிலில் ஏற்படும் சிக்கல்களை கையாளும் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோரின் நிபுணத்துவத்தை மேம்படுத்தும் வகையில் புதுமையான இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்ப செயல்பாடுகளை மேம்படுத்துதல், உத்திசார் வளர்ச்சியை அதிகரித்தல் தொடர்பான விரிவான புரிதலை இதில் பங்கேற்போர் அறியச் செய்வதே எங்களது குறிக்கோளாகும்” எனக் குறிப்பிட்டார்.

நான்கு ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய இந்த எம்பிஏ பாடத்திட்டத்தில் 900 மணி நேர வகுப்பறை அமர்வுகள் மற்றும் ப்ராஜக்ட்டுகள் இடம்பெறும். மொத்தத்தில் 192 கிரடிட்கள் இருக்கும். இக்கல்வி நிறுவன வளாகத்தில் ஆறு முறை நேரடிப் பயிற்சி வகுப்புகள், ஐஐடி மெட்ராஸ் கற்றல் ஆதாரங்கள், டிஜிட்டல் கடல்சார் நூலகம் போன்ற பயன்களையும் பங்கேற்பாளர்கள் பெற முடியும்.

பாடத்திட்டத்திற்கான கட்டணமான ரூ. 9,00,000-ஐ தவணைகளில் செலுத்த வேண்டியிருக்கும். படிப்புக் கட்டணத்தில் 50% வரை கல்வி உதவித் தொகைகள் கிடைக்கின்றன. மேலும் இப்பாடத்திட்டம் வங்கிக் கடன்களுக்கு தகுதி உடையதாகும்.

  

***

PKV/AG/RR



(Release ID: 2029289) Visitor Counter : 51


Read this release in: English