சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

லீட்ஸ் பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ் ஆகியவை இணைந்து நிலைத்தன்மைக்கான உயர் சிறப்பு மையத்தைத் தொடங்க உள்ளன

Posted On: 25 JUN 2024 3:23PM by PIB Chennai

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) ஆகியவை நிலையான வளர்ச்சிக்கான கூட்டு மெய்நிகர் மையத்தை   அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதனால் லீட்ஸ் பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ் இடையே தற்போது இருந்துவரும் கூட்டு முயற்சிகளில் மிகப்பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்படும். அத்துடன் நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களில் லீட்ஸ் கல்வியாளர்கள், பிற இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான தொடர்புகளும் ஒருங்கிணைக்கப்படும்.

பல்வேறு முக்கிய துறைகளில் அறிவை மேம்படுத்திக் கொள்வதையும், கண்டுபிடிப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் மதிப்புமிக்க இரு கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான இக்கூட்டு முயற்சி குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இத்திட்டத்தின்படி உலகளாவிய சவால்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை வழிநடத்தும் திறன் கொண்ட பல்துறைக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

பாடத்திட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், விரிவுரைகள் போன்ற கூட்டுக் கல்வி செயல்பாடுகளை ஏற்பாடு செய்யவும், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை உருவாக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. அதுமட்டுமின்றி, ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர்களை பரிமாறிக் கொள்ளுதல், மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் பரிமாற்றம், வெளியீடுகள் உள்ளிட்ட இருதரப்புக்கும் உதவும் அம்சங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை நேரில் பார்வையிட்ட சென்னைக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் திரு. ஆலிவர் பாலாசெட், ஐஐடி மெட்ராஸ், லீட்ஸ் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதைப் பார்வையிடுவது பெருமை அளிக்கிறது. சவால்களை எந்த அளவுக்கு எதிர்கொண்டு நிலையான தீர்வுகளை உருவாக்க முடியும் என்பதை இங்கிலாந்து- இந்தியா இடையேயான கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கூட்டு முயற்சி எடுத்துக்காட்டுகிறது. லீட்ஸ் பல்கலைக்கழகம் இந்தியாவுடன் 25 ஆண்டுகாலத் தொடர்பைக் கொண்டாடும் இவ்வேளையில், நமது நாடுகளுக்கும், உலகிற்கும் பெருமளவுக்கு நன்மைபயக்கும் விதமாக கல்வித் திறனை வளர்ப்பதற்கும், முன்னேற்றங்களை எட்டுவதற்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறதுஎனத் தெரிவித்தார்.

லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் சிவில் இன்ஜினியரிங் பள்ளியின் மீள்கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்புப் பிரிவு தலைவரான பேராசிரியர் வசிலிஸ் சரோசிஸ் இக்கூட்டு முயற்சியை உற்சாகப்படுத்திப் பேசினார்.

லீட்ஸ் பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ் இடையேயான ஒத்துழைப்பின் வாயிலாக வரலாற்றுச் சிறப்புமிக்க ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும். மேலும் கல்வி அனுபவங்களை வளப்படுத்தி, சிக்கலான சவால்களைத் தீர்க்க அர்ப்பணிப்புடன் கூடிய நிபுணர்களின் உலகளாவிய நெட்வொர்க் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

***

PKV/RR



(Release ID: 2028493) Visitor Counter : 17


Read this release in: English