சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பி.டெக் படிப்பை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது
Posted On:
14 JUN 2024 1:42PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் (பாடநெறி குறியீடு- 412எல்) பி.டெக் படிப்பைத் தொடங்கியுள்ளது. 2024-25-ம் கல்வியாண்டிலிருந்து இதற்கான மாணவர் சேர்க்கை தொடங்கும். சென்னை ஐஐடி வழங்கும் இளங்கலைப் பட்டம், மாணவர்களின் முக்கிய திறன்கள் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜேஇஇ (அட்வான்ஸ்டு) தேர்வு மூலம் இப்பாடத்திட்டத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றின் நிபுணத்துவத்தைப் பல்வேறு அம்சங்களில் வளர்க்கச் செய்து தொழில்துறையில் பரந்த அளவில் பயன்பாடுகளை வழங்குவதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும். ஜேஇஇ மூலம் இதில் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். பல்துறை அம்சங்களுடன் கணித அடிப்படைகள், தரவு அறிவியல்/ ஏஐ/எம்எல் அடித்தளங்கள், பயன்பாட்டு மேம்பாடு, பொறுப்பான வடிவமைப்புகளும் இப்பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.
சென்னை ஐஐடி-யின் முன்னாள் மாணவரும், ஐகேட், மாஸ்டெக் டிஜிட்டல் ஆகியவற்றின் இணை நிறுவனருமான திரு சுனில் வாத்வானியின் ரூ. 110 கோடி நன்கொடையில் நிறுவப்பட்டுள்ள வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி மூலம் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள சிறந்த செயற்கை நுண்ணறிவு மையமாகக் கொண்ட பள்ளிகளில் ஒன்றாக விளங்கச் செய்து, தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கொள்கைகளை அரசுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது இதன் இலக்காகும்.
பி.டெக்கின் இப்பாடத்திட்டம் பல்வேறு கல்வி நெகிழ்வுத்தன்மையை வழங்கும். மாணவர்கள் தங்கள் கற்றல் பயணத்தை இதே துறையிலும் பிற துறைகளில் இருந்தும் விருப்பத் தேர்வுகள் மூலம் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இந்தப் பாடத்திட்டம் குறித்து எடுத்துரைத்த சென்னை ஐஐடி இயக்குநரும், கணினி அறிவியல் பிரிவு பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “ஏஐ என்பது பொறியியல், அறிவியல் மற்றும் மானுடவியல் துறைகளை உள்ளடக்கியதாகும். இத்துறையில் வெற்றிகரமாகத் திகழ பல்துறைத் தொடர்புகளைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இதற்காகவே செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வில் பி.டெக் படிப்பு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற படிப்பு உலகிலேயே முதன்முறையாகும். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்களது ஆசிரியர்கள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இப்பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வழங்குவதன் மூலம் வளர்ந்துவரும் சந்தையில் பெரும் ஏஐ சவால்களை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும், உயர்மட்ட ஏஐ வல்லுநர்கள், தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரை உருவாக்கவும் ஐஐடிஎம் விரும்புகிறது” எனக் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் பிரத்யேக அம்சங்களை எடுத்துரைத்த வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேடா சயின்ஸ் மற்றும் சென்னை ஐஐடி ஏஐ பிரிவுத் தலைவர் பேராசிரியர் பி.ரவீந்திரன் கூறும்போது, “30 ஆண்டுகளுக்கு முன் கணினி அறிவியல் இருந்ததைப் போன்று தற்போது ஏஐ உள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது உருமாறும் தொழில்நுட்பமாகத் திகழும். இந்தத் தலைமுறைக்கும், வருங்காலத் தலைமுறைக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தீர்மானிப்பதாக அமையும். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வில் பி.டெக் படிப்பு என்பது தொடக்க கட்டம்தான். ஏஐ-யின் அடிப்படைகளை மாணவர்கள் போதிய அளவு அறிந்திருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். அதன்பின்னர் அவர்கள் இதனை ஆராய்ச்சிப் படிப்பாக தாங்களே சொந்த முயற்சியில் தொடர முடியும்” எனக் குறிப்பிட்டார்.
இதுபற்றி மேலும் விரிவாக எடுத்துரைத்த சென்னை ஐஐடி வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ ஆசிரியரான பேராசிரியர் அருண் கே.தங்கிராலா கூறுகையில், “இதற்கான பாடத்திட்டத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்திருக்கிறோம். உள்ளகப் பயிற்சி, இளங்கலை ஆராய்ச்சி, போன்றவை இருப்பதால் மாணவர்கள் நடைமுறை அனுபவங்களைப் பெறுவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன” எனக் குறிப்பிட்டார்.

***
SMB/KV
(Release ID: 2025275)
Visitor Counter : 102