சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ் இளநிலைப் பாடத்திட்டங்களில் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது
Posted On:
13 JUN 2024 12:01PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), ‘விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கையை 2024-25 கல்வியாண்டில் இருந்து தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, இந்தியப் பிரஜைகளுக்கு ஒவ்வொரு இளநிலைப் படிப்புகளிலும் மாணவிகளுக்கு பிரத்யேகமாக ஒரு இடம் உள்பட 2 இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.
நாட்டிலேயே முதல் ஐஐடி-யாக இளநிலைப் பட்டப்படிப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான சேர்க்கையை ஐஐடி மெட்ராஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களை பின்வரும் இணையதளத்தில் காணலாம்… https://jeeadv.iitm.ac.in/sea
விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வெகுமதி அளிப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் தகுதியான மாணவர்களை தங்களது விளையாட்டுகளில் தொடர்ந்து நீடிக்கச் செய்வதுடன், உயர்கல்வியைத் தொடரவும் ஊக்குவிக்கிறது.
விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளுக்கு எந்தவொரு மாணவரும் ஜேஇஇ (அட்வான்ஸ்டு) தகுதி பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் கூட்டு இடஒதுக்கீடு ஆணையம் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறாது. மாறாக ஐஐடி மெட்ராஸ் இதற்கான தனி இணைய முகப்பை ஜூன் 11, 2024 அன்று தொடங்கி இயக்கி வருகிறது.
இத்திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்காக விளையாட்டு வீரர்களை வரவேற்று ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “இளைஞர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், ஒழுக்கமான வாழ்க்கையையும் மட்டுமல்லாமல், வெற்றி தோல்விகளைக் கையாளும் மன முதிர்ச்சியையும், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் தோல்விகளை வெற்றியாக மாற்றுவதையும் விளையாட்டு கற்றுக்கொடுக்கிறது. இதுபோன்ற தரத்துடன் எங்கள் வளாகத்தில் இளைஞர்கள் இருப்பதையும், மற்ற குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக திகழ்வதையும் விளையாட்டு ஒதுக்கீடு உறுதி செய்யும்” என்றார்.
குறிப்பிட்ட விளையாட்டுகளைக் கொண்ட பட்டியலில் விண்ணப்பதாரர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தனி விளையாட்டுத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கைக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
விளையாட்டு தொடர்பான பல விருப்பப் பாடங்களை ஐஐடி மெட்ராஸ் சேர்த்துள்ளது. அதுமட்டுமின்றி ஆராய்ச்சி வசதிகளுடன கூடிய அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் கொண்டிருக்கிறது. உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் கல்விப் படிப்புகளை வழங்கும் உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையம். பல்வேறு உத்திசார் ஒத்துழைப்புகள் மூலம் மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை இலக்காகக் கொண்டு விளையாட்டு பயிற்சி தயாரிப்புகளை உருவாக்குகிறது.
###
(Release ID: 2024921)
Visitor Counter : 59