சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

நீர்த்துளிகளால் உடைக்கப்படும் இயற்கை தாதுக்கள் நானோ துகள்களை உருவாக்குவதாக ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

Posted On: 03 JUN 2024 2:34PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் பொதுவான கனிமங்களை நீர் நுண்திவலைகளால் உடைக்கச் செய்து நானோ துகள்களை உருவாக்கிட முடியும் என நிரூபித்துள்ளனர். மதிப்புவாய்ந்த ‘சயின்ஸ்’ இதழில் வெளியிடப்படும் ஐஐடி மெட்ராஸ்-ன் முதலாவது ஆய்வுக் கட்டுரை இதுவாகும்.

மேகங்கள், மூடுபனி போன்ற வளிமண்டல நீர்த்துளிகளில் உள்ள அயனி இனங்கள் மற்றும் தொடர்பு மின்மயமாக்கல் மூலம் சார்ஜ் செய்யப்படலாம். தாதுக்களின் சிதைவு புதிய மூலக்கூறுகளை உருவாக்கி புதிய மேற்பரப்புகளை உருவாக்குகிறது. அத்தகைய மேற்பரப்புகளில் பல்வேறு வகையான வினையூக்கங்களும் ஏற்படக்கூடும். இந்த செயல்முறைகள் உயிர்வழித் தோற்றத்தில் முக்கியமானதாக இருக்கவும் வாய்ப்புள்ளது.

பூமியில் விழக்கூடிய நானோ துகள்கள், மூலக்கூறுகளால் ஆன ‘நுண்ணிய நீர்த்துளிகள் விழுதல்’ (microdroplet showers) என்பது கிரகத்தின் வேதியியல் மற்றும் உயிரியல் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சயின்ஸ் இதழானது அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் தி அட்வான்ஸ்மெண்ட் ஆஃப் சயின்ஸ் எனப்படும் உலகின் மிகப் பழமையானதும், மிகப்பெரிய பொது அறிவியல் அமைப்பால் மதிப்பாய்வு செய்யப்படுவதாகும். பிரபல கண்டுபிடிப்பாளர் தாமஸ் எடிசன் வழங்கிய மூலதனத்துடன் 1880-ல் தொடங்கப்பட்ட பின்னர் முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் மையமாக இந்த அமைப்பு விளங்கி வருகிறது. அதிகளவில் மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரைகளில் தொடர்ந்து தரவரிசையில் இருக்கும் கட்டுரைகளைக் கொண்ட உலகின் தலைசிறந்த கல்வி இதழ்களில் ஒன்றாக சயின்ஸ் கருதப்படுகிறது.

பத்மஸ்ரீ விருதுபெற்றவரும் ஐஐடி மெட்ராஸ் வேதியியல் துறையின் நிறுவனப் பேராசிரியருமான தாளப்பில் பிரதீப், ஐஐடி மெட்ராஸ்-ல் பிஎச்டி முடித்த ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் ஆசிரியரான செல்வி பி.கே.ஸ்பூர்த்தி ஆகியோர் தலைமையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பெங்களூரு ஜவஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், இந்திய அறிவியல் அகாடமியின் தலைவருமான உமேஷ் வி.வாக்மேரின் அறிவுரையின் கீழ், செல்வி கோயேன்ட்ரிலா தேப்நாத் கணக்கீட்டுப் பணிகளை மேற்கொண்டார். கண்டுபிடிப்புகள் அனைத்தும் 31 மே 2024 தேதியிட்ட சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. (DOI: 10.1126/science.adl3364)

இந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் வேதியியல் துறையின் நிறுவனப் பேராசிரியர் தாளப்பில் பிரதீப், “நுண்துளிகள் ரசாயன எதிர்வினைகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதும், அதன் விளைவாக புதிய ரசாயனப் பிணைப்புகள் உருவாவதும் நாம் அறிந்ததுதான். மைக்ரோ துளிகளால் ரசாயன பிணைப்புகளை உடைக்க முடியும் என்று எங்கள் எண்ணத்தில் தோன்றியதன் விளைவுதான் இந்த கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது” எனக் குறிப்பிட்டார்.

இந்த ஆராய்ச்சியின் அடுத்தகட்டம் குறித்து விவரித்த அவர், “பாறைகளை இயற்கையான சிறுதுகள்களாக்கி மணலாக மாற்றுவது இயற்கையாக நடைபெறுகிறது. வெளிப்படையாகக் கூறினால், மண்ணுக்கு மணலை உருவாக்குவதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளோம். எதிர்காலத்தில் போதிய வளங்களுடன் பாலைவனங்களிலும் பசுமையாக்க முடியும்” என்றார்.

ஐஐடி மெட்ராஸில் பிஎச்டி ஆராய்ச்சிக் கட்டுரையை அண்மையில் முடித்த முதல் ஆசிரியரான செல்வி பி.கே.ஸ்பூர்த்தி இந்த ஆராய்ச்சியின் பயன்பாடுகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

இதன் செயல்பாடு குறித்து பேராசிரியர் உமேஷ் வி. வாக்மேர், "நீர் நுண்துளிகளுக்கு உள்ளார்ந்த சிக்கலான செயல்முறைகளை இந்த நிகழ்வு உள்ளடக்கியதாகும், அதன் செயல்முறையைப் புரிந்துகொள்வதன் மூலம் பல அடிப்படை அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்” என்றார்.

   

***

PKV/KV

 



(Release ID: 2022579) Visitor Counter : 49


Read this release in: English