சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ஐஐடி மெட்ராஸ் சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் CoE-CPPICS, புரோகிராம் செய்யக்கூடிய சிலிக்கான் ஃபோட்டானிக் பிராசசர் சிப்களை மேம்படுத்த சில்டெரா மலேசியாவுடன் இணைந்து செயல்படுகிறது

Posted On: 24 MAY 2024 11:25AM by PIB Chennai
  • குவாண்டம் கம்ப்யூட்டிங், அதிவேக பாதுகாப்பான தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு இந்த சிப்கள் பயன்படுத்தப்படும்.
  • இருதரப்பிலும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் சில்டெராவின் துணை இயக்குநர் திருமதி செவ் யான் எங், ஐஐடி மெட்ராஸின் CoE-CPPICS தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி திரு.அர்னாப் கோஸ்வாமி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் உயர்சிறப்பு மையம்- புரோகிராம் செய்யக்கூடிய ஃபோட்டானிக் ஒருங்கிணைப்பு சுற்றுகள் மற்றும் அமைப்புகளுக்கான மையம் (Silicon Photonics CoE-CPPICS), மலேசியாவின் சில்டெரா (Silterra Malaysia Sdn. Bhd) நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. புரோகிராம் செய்யக்கூடிய சிலிக்கான் ஃபோட்டானிக் பிராசசர் சிப்கள் கூட்டு மேம்பாட்டிற்காகவும், குறிப்பாக குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு நிலை பயன்பாடுக்காகவும் இந்த கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நவீன சிலிக்கான் ஃபோட்டானிக் சாதனங்கள் மற்றும் சர்க்யூட்கள் தொடர்பாக இணைந்து ஆராய்ச்சியை மேற்கொள்வது இந்த கூட்டுமுயற்சியின் முக்கிய அம்சமாகும். தரவு மையங்கள், உயர் செயல்திறன் மிகுந்த கணினிகள் மற்றும் ஏஐ/எம்எல்-ல் பயன்படுத்தும் விதமாக ஆற்றல்திறன் கொண்ட அதிவேக இன்டர்கனெக்ட் தீர்வுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

சில்டெரா மலேசியா Sdn Bhd., உலகளாவிய செமிகண்டக்டர் ஃபவுண்டரியாகும். இந்நிறுவனம் தனது சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் அதிநவீன செமிகண்டக்டர் தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் ஐஐடி மெட்ராஸில் உள்ள சிலிக்கான் ஃபோட்டோனிக்ஸ் CoE-CPPICS ICS குழு சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் செயல்முறை வடிவமைப்பு கருவியை சில்டெரா சிலிகான் ஃபோட்டானிக்ஸ் ஃபவுண்டரிக்கு தனது ஆதாரங்களின் வாயிலாக மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது. இதன் மூலம் பரஸ்பரம் இருதரப்புக்கும் பயன் ஏற்படும்.

இந்த இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஐடி மெட்ராஸ் டீன் (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) பேராசிரியர் மனு சந்தானம் மற்றும் சில்டெரா மலேசியா Sdn Bhd., நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் ஆல்பர்ட் பாங் சூ கூன் ஆகியோர் கையெழுத்திட்டனர். சிலிக்கான் ஃபோட்டோனிக்ஸ் CoE-CPPICS ICS தலைமை ஆய்வாளர் பேராசிரியர் பிஜோய் கிருஷ்ண தாஸ், சில்டெரா மலேசியா Sdn Bhd., நிறுவனத்தின் வளர்ந்துவரும் தொழில்நுட்பத் துறையின் தலைவர் திரு. துங் பெங் ஜு ஆகியோரும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, “சில்டெரா மற்றும் ஐஐடி மெட்ராஸ்-ன் சிலிக்கான் ஃபோட்டோனிக்ஸ் CoE-CPPICS ICS ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. உயர் செயல்திறன் கொண்ட சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் தொழில்நுட்பத் தீர்வுகளில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான திறவுகோலாக அமைந்துள்ளது. அதிநவீன வர்த்தக செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் வசதிகளை நிறுவுவதை நோக்கி பாரதம் முன்னேறும் நிலையில், ஆராய்ச்சி மற்றும் மனிதத் திறன் மேம்பாட்டு முயற்சிகளையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தற்காலத் தொழில்நுட்பங்களில் அதன் இலக்கை எட்டுவதற்கு இந்த ஒத்துழைப்பு உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்எனக் குறிப்பிட்டார்.

இருதரப்பு ஒத்துழைப்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் குறித்து விவரித்த CoE-CPPICS-ன் தலைமை ஆய்வாளரும் ஐஐடி மெட்ராஸ் மின்பொறியியல் துறையின் ஆசிரிய உறுப்பினருமான பேராசிரியர் பிஜோய் கிருஷ்ணதாஸ் கூறும்போது, “சில்டெராவுடனான எங்களது கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (Meity) கணிசமான நிதியுதவியுடன் கடந்த 2021 ஜனவரியில் ஐஐடி மெட்ராஸ்-ல் நிறுவப்பட்ட CoE-CPPICS மூலம் எங்களது லட்சியங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை நிறைவேற்ற உதவும். சில்டெராவின் 200 மி.மீ. ஃபவுண்டரியின் தலைசிறந்த சிலிக்கான் ஃபோட்டமானிக்ஸ் செயல்முறை தொழில்நுட்பம், சிலிக்கான் ஃபோட்டானிக்ஸ் வேஃபர் அளவிலான சோதனை வசதிகள், சாதனங்களின் வடிவமைப்பு, மிகத் துல்லியமான மாடலிங், சர்க்கியூட் சிமுலேஷன் நிபுணத்துவம் போன்றவைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுகாக CoE-CPPICS குழுவினரால் அணுகப்படும். இதன் மூலம் வலுவான, மேம்படுத்தப்பட்ட புரோகிராம் செய்யக்கூடிய ஃபோட்டானிக் பிராசசர் சிப்புகளை உருவாக்க முடியும்என்றார்.

பேராசிரியர் பிஜோய் கிருஷ்ணதாஸ் மேலும் கூறுகையில், “இவ்வாறான நீண்டகால தொழில்-கல்வி ஆராய்ச்சி கூட்டாண்மையின் மூலம் எங்களின் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் பயன்பெறுவார்கள். ஐபி உருவாக்குதல், தொழில்முனைவுக்கான இந்த தனித்துவமான வாய்ப்பை அவர்களால் பயன்படுத்திக் கொள்ள இயலும். எல்லாவற்றுக்கும் மேலாக தேசிய செமிகண்டக்டர் மிஷன் (ISM) மற்றும் தேசிய குவாண்டம் மிஷன் (NQM) தொடர்பான இந்தியாவின் கனவுத் திட்டங்களுக்கு பெரும் பங்களிப்பை வழங்க முடியும்எனத் தெரிவித்தார்.

கூட்டுமுயற்சியின் முக்கிய அம்சங்களை விளக்கிய சில்டெரா மலேசியா Sdn Bhd-வின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆல்பர்ட் பாங், கூறுகையில், “இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இருப்பது எங்களுக்கு பெருமையளிக்கிறது. தொடக்கத்தில் இருந்தே சில்டெரா மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிஜிட்டல் டெக்னாலஜிஸ் ஆகிய துறைகளில் அதன் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக சிலிக்கான் ஃபோட்டானிக் சிப்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம். ஐஐடி மெட்ராஸ் உடனான இந்த உத்திசார் ஒத்துழைப்புடன் எங்களது சிலிக்கான் ஃபோட்டானிக் செயல்முறை மற்றும் வடிவமைப்புக் கருவிகளை மேம்படுத்த விருக்கிறோம். குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் அமைப்புகள் பயன்பாடுகளின் புதிய சகாப்தத்தைத் தூண்டும் என நம்புகிறோம். தவிர, ஐஐடி மெட்ராஸ்-ல் CoE-CCPICS உடனான எங்களது கூட்டு முயற்சிகள் மிகச் சிறந்த இத்துறையில் வளர்ச்சியை விரைவுபடுத்த உதவும்எனக் குறிப்பிட்டார்.

  

  

  

###



(Release ID: 2021441) Visitor Counter : 61


Read this release in: English