சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் தரவு அறிவியல் பாடத்திட்டத்தின் மூலம் 2,500 மாணவ-மாணவிகள் வேலை வாய்ப்புகளையும், தகுதி உயர்வுகளையும் பெற்றுள்ளனர்
Posted On:
01 MAY 2024 1:02PM by PIB Chennai
பிஎஸ். தரவு அறிவியல் மற்றும் பயன்பாடுகள் பட்டப்படிப்பு (BS Degreee in Data Science and Applications) நான்காண்டுகளை நிறைவு செய்யவிருக்கும் நிலையில், 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலை கிடைக்கவும், தகுதி உயர்வு பெறவும் உதவியாக இருந்துள்ளது.
அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம், ஜார்ஜியா பல்கலைக்கழகம், பின்லாந்தில் உள்ள ஆல்டோ பல்கலைக்கழகம் போன்ற மதிப்புவாய்ந்த பல்கலைக் கழகங்களில் முதுகலை மற்றும் பிஎச்டி படிப்புகளில் 850க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தங்களின் முக்கிய படிப்புகளையும் கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியலுக்கு (Data Science) மாற்றிக் கொண்டுள்ளனர்.
கடும் போட்டி நிறைந்த ஜெஇஇ தேர்வை எழுதாமலேயே ஐஐடியில் மாணவர்கள் படிப்பதை சாத்தியமாக்கும் வகையில் வரலாற்றில் முதன்முறையாக இப்பாடத்திட்டம் கடந்த ஜூன் 2020-ல் செயல்படுத்தப்பட்டது. இதுவரை நாடு முழுவதும் இருந்து 27,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் சேர்ந்துள்ளனர். வசிப்பிடம், வயது போன்ற தடைகளைத் தாண்டி ஐஐடி தரத்துடன் உயர்கல்வியை அணுக முடிவதால் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிஎஸ் பட்டப்படிப்பு வெற்றி பெற்றுள்ளது.
மே 2024 தொகுதிக்கான விண்ணப்பங்களைப் பெற கடைசி நாள் மே 26, 2024. ஆர்வமுள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்- https://study.iitm.ac.in/ds/
இப்பாடத்திட்டத்தின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “எங்களது பிஎஸ் தரவு அறிவியல் பாடத்திட்டமும், அதில் படிக்கும் மாணவர்களும் படைத்திட்ட சாதனை பெருமையளிக்கிறது. கடினமாக உழைக்கத் தயாராக உள்ள மற்றும் கற்க ஆர்வமுடைய எவருக்கும் ஐஐடி மெட்ராஸ்-ன் கதவுகள் திறந்தே இருக்கின்றன. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையில் இதுபோன்ற மேலும் பல்வேறு பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக சவால்களை சந்திக்கும் பிரிவினருக்கும் கல்விக்கான சமமான அணுகுமுறையை இப்பாடத்திட்டம் உறுதி செய்வதுடன், கட்டணத் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் அளித்து வருகிறது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவிகளுக்கும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. சமூகப் பொறுப்புணர்வு நிதியின் மூலம் வெரிசோன், ரெனால்ட் நிசான், எச்எஸ்பிசி, டாடா ஏஐஏ, சதர்லேண்ட், எல்டிடிஎஸ், எல்&டி தேல்ஸ், டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட், வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இதற்கான தொகையை வழங்குகின்றன. இதுதவிர தனிநபர்களிடம் இருந்தும், அரசின் பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழும் நன்கொடைகள் பெறப்படுகின்றன. இத்திட்டத்தின் வாயிலாக இதுவரை 3,645 மாணவ-மாணவிகள் பயனடைந்திக்கின்றனர். பணத்தைப் பற்றிய கவலையின்றி அவர்களால் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடிகிறது.
அகமதாபாத்தைச் சேர்ந்த திரு சுபம் கட்டானி, சென்னையைச் சேர்ந்த திரு பிரசாந்த் எஸ் ஆகியோர் மருத்துவக் குறைபாடுகளால் கல்லூரிகளுக்கு நேரில் செல்ல இயலாத நிலையில் உள்ளனர். இருவரும் சிறந்த மாணவர்கள். இந்த இரு மாணவர்களும் தங்கள் வசதிக்கேற்ப வீட்டில் இருந்தபடியே தரமான கல்வியைப் பெற்று இப்பாடத்திட்டத்தில் சிறந்த மாணவர்களாகத் திகழ்வதுடன் உள்ளகப் பயிற்சிக்கான வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர்.
-----------
PKV/RS/RR
(Release ID: 2019271)
Visitor Counter : 301