சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் 77-வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது
Posted On:
25 APR 2024 6:53PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் சென்னையில் செயல்படும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CLRI), தனது 77-வது நிறுவன தினத்தை இன்று (25.04.2024) கொண்டாடியது. இதில் சிஎல்ஆர்ஐ-யின் தலைமை விஞ்ஞானி திரு.கே.சி.வேலப்பன் பங்கேற்று விழாவில் கலந்து கொண்டவர்களை வரவேற்றார். சிஎஸ்ஐஆர் - சிஎல்ஆர்ஐ இயக்குநர் டாக்டர் கே.ஜே.ஸ்ரீராம் விழாவுக்குத் தலைமை வகித்தார். நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், தோல் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கும் இந்த நிறுவனமும் இதன் முன்னாள் இயக்குநர்களும் ஆற்றிய பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்தார். நிறுவனத்தின் ஆராய்ச்சி திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவரும், சென்னை ஏ.வி.டி குழுமங்களின் தலைவருமான திரு ஹபீப் உசேன் நிறுவன நாள் கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தமது உரையில், தோல் துறையில் இந்தியாவின் உலகளாவிய பங்களிப்பை அதிகரிக்க தொழில்துறை திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் செயலாக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
நிறுவனத்தின் நிர்வாக முதுநிலை கட்டுப்பாட்டாளர் திரு கே.எம்.ஸ்ரீதர் நன்றியுரை வழங்கினார். 77-வது சிஎஸ்ஐஆர் - சிஎல்ஆர்ஐ நிறுவன தின கொண்டாட்டத்தையொட்டி, 2024 ஏப்ரல் 24 மற்றும் 25-ம் தேதிகளில் பொதுமக்கள் நிறுவனத்தைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டது. இதில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 570 மாணவர்கள் நிறுவனத்தைப் பார்வையிட்டு இதன் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்டனர்.


***
AD/PLM/KPG/DL
(Release ID: 2018874)
Visitor Counter : 208