விவசாயத்துறை அமைச்சகம்

ஹரியானா மாநிலம் கர்னாலில் ஐ.சி.ஏ.ஆர் - தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் 20-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது

Posted On: 15 MAR 2024 5:43PM by PIB Chennai

ஐ.சி.ஏ.ஆர் - தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் 20-வது பட்டமளிப்பு விழா ஹரியானா மாநிலம் கர்னாலில் இன்று நடைபெற்றது. இதனை நிறுவனத்தின் இயக்குநரும், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான டாக்டர் தீர் சிங் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், டி.ஏ.ஆர்.இ முன்னாள் செயலாளர் பத்ம பூஷண் டாக்டர் ஆர்.எஸ்.பரோடா பட்டமளிப்பு விழா உரையாற்றினார். மொத்தம் 278 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 49 மாணவர்களுக்கு பி.டெக் பட்டமும், 127 மாணவர்களுக்கு முதுகலை பட்டமும், 102 ஆராய்ச்சியாளர்களுக்கு பிஎச்.டி பட்டமும் வழங்கப்பட்டது.

பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கிய டாக்டர் தீர் சிங், கர்னாலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர் - தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம், உயர்தர ஜெர்ம் பிளாசத்தை பெருக்குவதற்கு மேம்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயர்தர பசு மற்றும் எருமை இனங்களை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார். மாணவர்கள் வேலை தேடுவதை விட தொழில்முனைவோராக மாற வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், மனிதவள மேம்பாட்டுத் துறையில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், மாணவர்களுக்கு பி.டெக் (பால்வள தொழில்நுட்பம்) பட்டம் வழங்குவதுடன், 14 பாடங்களில் எம்.டெக் பட்டங்களையும், 14 பாடங்களில் பி.எச்.டி பட்டங்களையும் வழங்குவதாகவும் டாக்டர் சிங் மேலும் கூறினார். இந்த நிறுவனம் இதுவரை 85 காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அவற்றில் 49 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் சிங் பின்னர் தெரிவித்தார். நோய்களைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், ஒரு கால்நடையின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

பிரதம விருந்தினராக உரையாற்றிய டாக்டர் ஆர்.எஸ்.பரோடா, பால்வளத் துறையில் சிறந்த சேவைகளை வழங்கி வரும் தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனத்தைப் பாராட்டினார். நிறுவனத்தின் பங்களிப்பைப் பாராட்டிய அவர், அயராத முயற்சிகளுக்குப் பிறகு, பல ஆண்டுகளாக அனைத்து மாநில வேளாண் பல்கலைக்கழகங்களிலும் இந்த நிறுவனம் முதலிடத்தில் உள்ளது என்று கூறினார். விவசாயம் மற்றும் பால்வளத் துறைக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பு ஒரு முக்கியமான சவாலாக உள்ளது என்று பேசிய அவர், உணவுப் பாதுகாப்புத் துறையில் நாம் நீண்ட தூரம் வந்துள்ளோம் என்று கூறினார். ஆனால் ஊட்டச்சத்து பாதுகாப்புத் துறையில் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

வேளாண் துறையில் கடும் உழைப்பின் விளைவாக பால் உற்பத்தியில் இன்று இந்தியா வெகுதூரம் முன்னேறியுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் விளைவாக, நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து சராசரி ஆயுட்காலம் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஜோர்ஹாட்டில் உள்ள அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் கே.எம்.புஜர்பருவா மற்றும் சென்னை பிரகாஷ் ஃபுட்ஸ் அண்ட் ஃபீட் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் டாக்டர் டி.வி.கே.பிரகாஷ்ராவ் ஆகியோருக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கௌரவ பட்டங்களை வழங்கியது.

---- 

PKV/KPG/KRS



(Release ID: 2015051) Visitor Counter : 37


Read this release in: English , Urdu , Hindi