சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை ஐஐடி சிஎப்ஐ திறந்தவெளி அரங்கில் (CFI Students Open House) தொழில்துறையினர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான புதிய தொழில்நுட்பத் தயாரிப்புகள் இடம்பெற்றன
Posted On:
03 MAR 2024 3:51PM by PIB Chennai
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவன (ஐஐடி மெட்ராஸ்) புத்தாக்க மையத்தின் (Centre for Innovation – CFI) மாணவ-மாணவிகள் உருவாக்கிய அதிநவீனத் தொழில்நுட்பங்கள், நேற்றும், இன்றும் (2 & 3 மார்ச் 2024) நடத்தப்பட்ட வருடாந்திர திறந்தவெளி அரங்கில், பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. சென்னை ஐஐடி மாணவர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், முன்னாள் மாணவர்கள் முன்னிலையில் காண்பித்து அவற்றின் சிறப்பம்சங்களை எடுத்துரைப்பது இதன்நோக்கமாகும்.
சூரிய சக்தியில் இயங்கும் கார், மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்கான ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs), அல்ட்ராசானிக் ஒலியால் இயக்கப்படும் மெட்டல் 3டி பிரிண்டர், செயலிழந்த விரல்களை இயக்கும் வகையில் அணியக்கூடிய கருவி உள்ளிட்ட 76 வகையான தயாரிப்புகளை 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தினர்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் புத்தாக்க மையமான இதில் (Centre for Innovation), புதுமைக் கண்டுபிடிப்பு ஆய்வகம் உள்ளது. இங்கு மாணவர்களுக்கு நிதியுதவியுடன், 3டி பிரிண்டர்கள், லேசர் கட்டர்கள், மின்னணுப் பணிநிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகின்றன.
புத்தாக்க மையம் மூலம் இதுவரை, 100-க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் பெறப்பட்டிருப்பதுடன், செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், உயிரித் தொழில்நுட்பம், மின்னணு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் ஏராளமான புத்தொழில் நிறுவனங்களும் தொடங்கப்பட்டிருக்கின்றன.
புதுமைத் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வரும் மாணவர்களைப் பாராட்டி சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “சென்னை ஐஐடி-யின் மிகத் துடிப்பான அமைப்புகளில் ஒன்றாக புத்தாக்க மையம் (CFI) விளங்குகிறது. இந்தியாவில் அடுத்த தலைமுறைக்கான கல்வி எவ்வாறு இருக்க வேண்டும் என்ற ஒட்டுமொத்த எதிர்பார்ப்பில் புத்தாக்க மையம் மாற்றத்தை ஏற்படுத்தும். புத்தாக்க முயற்சிகளுக்கு ஆதரவை வழங்கி வருகிறோம். புதிய கண்டுபிடிப்புகளுக்கும், தொழில்முனைவோருக்கும் ஆதரவளிப்பதில் புத்தாக்க மையம் சிறந்த முறையில் செயலாற்றி வருகிறது” எனத் தெரிவித்தார்.
1KGA.JPG)
GBKA.JPG)
DV0T.JPG)
***
AD/PLM/DL
(Release ID: 2011078)