பிரதமர் அலுவலகம்

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் ரூ. 21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்



ரூ. 18,100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

கங்கை ஆற்றின் குறுக்கே 6 வழிப் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்

பீகாரில் 3 ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

பீகாரில் தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 2,190 கோடி செலவில் உருவாக்கப்பட்ட 12 திட்டங்களை தொடங்கி வைத்தார்

பாட்னாவில் யூனிட்டி மாலுக்கு அடிக்கல் நாட்டினார்

"பெருமைக்குரிய பாரத ரத்னா விருது கர்பூரி தாக்கூருக்கு வழங்கப்படுவது ஒட்டுமொத்த பீகாருக்கும் கெளரவம்"

"நாட்டின் ஒவ்வொரு ஏழையின் திறன்களையும் மேம்படுத்த அரசு செயல்படுகிறது"

"பீகாரின் வளர்ச்சி, அமைதி, சட்டம் ஒழுங்கு மற்றும் பீகாரில் சகோதரிகள் மற்றும் மகள்களுக்கான உரிமைகள் – இது மோடியின் உத்தரவாதம்"

Posted On: 02 MAR 2024 4:17PM by PIB Chennai

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் இன்று ரூ. 21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்களில் சாலை, ரயில்வே, தூய்மை கங்கை உள்ளிட்ட திட்டப் பணிகள் அடங்கும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அனுக்ர நாராயண் போன்ற பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மகத்தான ஆளுமைகளை ஈன்றெடுத்த அவுரங்காபாத் மண்ணில் பீகாரின் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் இன்று எழுதப்படுகிறது என்றார். நவீன பீகாருக்கான தொலைநோக்குப் பார்வையை வழங்கும் சாலை மற்றும் ரயில் திட்டங்கள் உட்பட சுமார் ரூ. 21,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்படுகின்றன அல்லது அடிக்கல் நாட்டப்படுகின்றன என்று அவர் கூறினார். திட்டங்களை உரிய காலத்தில் முடித்து நாட்டுக்கு அர்ப்பணிப்பது தற்போதைய அரசின் அடையாளம் என்று அவர் தெரிவித்தார். இது மோடியின் உத்தரவாதம் என்று கூறிய பிரதமர், தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் ஆரா பை பாஸ் ரயில் பாதை மற்றும் பன்னிரண்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதை எடுத்துரைத்தார். பீகார் மக்கள், குறிப்பாக அவுரங்காபாத் மக்கள் வாரணாசி – கொல்கத்தா விரைவுச் சாலையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், இது உத்தரப்பிரதேசம் மற்றும் கொல்கத்தாவுக்கான பயண நேரத்தை சில மணி நேரங்களாகக் குறைக்கும் என்றார். தற்போதைய அரசின் செயல்பாட்டு நடைமுறையை எடுத்துரைத்த பிரதமர், இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக பீகார் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

 

அண்மையில் அரசு பாரத ரத்னா விருது அறிவித்த ஜன் நாயக் கர்பூரி தாக்கூருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். இந்த விருது ஒட்டுமொத்த பீகாருக்கும் கிடைத்த கெளரவம் என்று பிரதமர் கூறினார்.

மாநிலத்தில் இரட்டை என்ஜின் அரசு மீண்டும்ச செயல்படுதைக் குறிப்பிட்ட பிரதமர், இன்று பீகார் முழு உற்சாகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் உள்ளது என்றார்.

ஒரே நாளில் தொடங்கப்படும் வளர்ச்சித் திட்டங்களின் அளவை சுட்டிக்காட்டிய பிரதமர், இரட்டை இன்ஜின் அரசின் வேகத்தை இது காட்டுகிறது என்றார். சாலைத் திட்டங்கள் பாட்னா, நாளந்தா, ஜஹானாபாத், கயா, வைஷாலி, சமஸ்திபூர் மற்றும் தர்பங்கா போன்ற நகரங்களுக்கு நல்ல மாற்றகத்தை வழங்கும் என்று அவர் கூறினார். இதேபோல், புத்தகயா, விஷ்ணுபாத், ராஜ்கிர், நாளந்தா, வைஷாலி மற்றும் பவாபுரி ஆகிய இடங்களிலும் சுற்றுலா வாய்ப்புகள் அதிகம் உள்ளதை அவர் குறிப்பிட்டார். தர்பங்கா விமான நிலையம் மற்றும் பிஹ்தா விமான நிலையங்களும் இந்த சாலை உள்கட்டமைப்புடன் இணைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பீகாரின் சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள வாய்ப்புகள் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், வந்தே பாரத், அம்ரித் பாரத் போன்ற நவீன ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்ததையும், அமிர்த பாரத் திட்டத்தில் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுவதையும் குறிப்பிட்டார். இளைஞர்கள் முன்பு வேறு பகுதிகளுக்கு அதிகம் இடம்பெயர்ந்ததைக் குறிப்பிட்ட பிரதமர், தற்போது திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை எடுத்துரைத்தார். பீகாரின் கைவினைப்பொருட்களை ஊக்குவிப்பதற்காக சுமார் ரூ. 200 கோடி மதிப்புள்ள ஏக்தா மாலுக்கு அடிக்கல் நாட்டியதையும் பிரதமர் குறிப்பிட்டார், மேலும் இது மாநிலத்திற்கு ஒரு புதிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் கூறினார். பீகாரை மீண்டும் பழைய வளர்ச்சி இல்லாத காலத்திற்குச் செல்ல மாட்டோம் எனவும் இது ஒரு உத்தரவாதம் என்றும் பிரதமர் கூறினார்.

பீகாரில் உள்ள ஏழைகள் வளர்ச்சியடையும் போது பீகார் வளர்ச்சியடையும் என்றும் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் நலிவடைந்தவர்கள் மீது அரசு கவனம் செலுத்துவது குறித்து அவர் விரிவாக விளக்கினார். பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் பலனாக பீகாரில் சுமார் 9 கோடி பயனாளிகள் பயனடைவதாக அவர் தெரிவித்தார். உஜ்வாலா எரிவாயு இணைப்புகள் மூலம் பீகாரில் 1 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர் என்றும் விவசாயிகளுக்கான கெளரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ் 90 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். பீகாரில் 80 லட்சம் ஆயுஷ்மான் அட்டைதாரர்கள் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.  பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள 4 மாவட்டங்களில் 1 லட்சம் ஹெக்டேருக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்கும் வடக்கு கோயல் நீர்த்தேக்க திட்டம் விரைவில் முடிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

"பீகாரின் வளர்ச்சி, அமைதி, சட்டம் ஒழுங்கு மற்றும் பீகாரில் சகோதரிகள் மற்றும் மகள்களுக்கான உரிமைகள் – இது மோடியின் உத்தரவாதம்" என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

பீகார் ஆளுநர் திரு ராஜேந்திர வி. அர்லேகர், பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார், பீகார் துணை முதலமைச்சர்கள் திரு சாம்ராட் சவுத்ரி, திரு விஜய் குமார் சின்ஹா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

ரூ. 18,100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்ததுடன், பல திட்டங்களுக்கு அடிக்கலும் நாட்டினார். 63.4 கிலோமீட்டர் நீளமுள்ள இருவழிப்பாதை, தேசிய நெடுஞ்சாலை எண் 227-ல் ஜெய்நகர்-நராஹியா பிரிவு; என்.எச் -131 ஜி-ல் கன்ஹௌலி முதல் ராம்நகர் வரையிலான ஆறு வழி பாட்னா ரிங் சாலையின் பிரிவு; கிஷன்கஞ்ச் நகரில் தற்போதுள்ள மேம்பாலத்திற்கு இணையாக 3.2 கி.மீ நீளமுள்ள இரண்டாவது மேம்பாலம்; 47 கிலோமீட்டர் நீளமுள்ள பக்தியார்பூர்-ரஜௌலியை நான்கு வழிப்பாதையாக்குதல்; தேசிய நெடுஞ்சாலை 319-ல் 55 கிலோ மீட்டர் நீளமுள்ள அர்ரா – பராரியா பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றுதல் ஆகிய  திட்டங்கள் இதில் அடங்கும்.

அமாஸ் முதல் ஷிவ்ராம்பூர் கிராமம் வரையிலான 55 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு கிரீன்ஃபீல்ட் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் உட்பட ஆறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

பாட்னா வட்டச் சாலையின் ஒரு பகுதியாக கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் ஆறு வழி பாலத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த பாலம் நாட்டின் மிக நீளமான ஆற்றுப் பாலங்களில் ஒன்றாக இருக்கும்.  இந்தத் திட்டம் பாட்னா நகரம் வழியாக போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், பீகாரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு இடையே விரைவான மற்றும் சிறந்த இணைப்பை வழங்கி, ஒட்டுமொத்த பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும்.

பீகாரில் தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 2,190 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட பன்னிரண்டு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டங்கள் பல இடங்களில் கங்கை நதியில் விடப்படுவதற்கு முன்பு கழிவுநீர் சுத்திகரிப்பை உறுதி செய்கின்றன. இது ஆற்றின் தூய்மையை மேம்படுத்துகிறது மற்றும் பிராந்திய மக்களுக்கு பயனளிக்கிறது.

பாட்னாவில் யூனிட்டி மாலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ. 200 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படவுள்ள இந்த திட்டம், சர்வதேச வடிவமைப்பு நடைமுறைகள், தொழில்நுட்பம், மற்றும் அழகியல் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன மையமாகக் கருதப்படுகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இந்த மால்  பிரத்யேக இடங்களை வழங்கும். இந்த மாலில் தனித்துவமான தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 36 பெரிய அரங்குகளும், பீகாரின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 38 சிறிய அரங்குகளும் அமைக்கப்படும். யூனிட்டி மால் உள்ளூர் உற்பத்தி மற்றும் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்புப் பொருட்கள், புவிசார் குறியீடு பெற்ற (ஜிஐ) தயாரிப்புகள் போன்றவற்றை ஊக்குவிக்கும்.

பாடலிபுத்ரா முதல் பஹ்லேசா வரையிலான ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டம் உட்பட பீகாரில் மூன்று ரயில்வே திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ரயில் திட்டங்கள் சிறந்த ரயில் இணைப்புக்கு வழிவகுக்கும். ரயில்களின் திறன் மற்றும் இயக்கத்தை மேம்படுத்தும் மற்றும் இப்பகுதியில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

***

ANU/PLM/DL



(Release ID: 2010969) Visitor Counter : 69